Published : 26 Jun 2025 06:14 PM
Last Updated : 26 Jun 2025 06:14 PM
புதுடெல்லி: இரு சக்கர வாகனங்களுக்கு அரசு சுங்க வரி விதிக்கப் போவதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையல்ல என தெரிவித்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, அத்தகைய திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்க இருப்பதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளைப் பரப்புகின்றன. அத்தகைய முடிவு எதுவும் முன்மொழியப்படவில்லை. இரு சக்கர வாகனங்களுக்கு முழுமையான வரி விலக்கு தொடரும். உண்மை தெரியாமல் தவறான செய்திகளைப் பரப்புவதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்துவது ஆரோக்கியமான ஊடக அறம் அல்ல. இதை நான் கண்டிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதேபோல், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் (NHAI), இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கவரி விதிக்கும் திட்டம் எதும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
FASTag அடிப்படையில் வருடாந்திர பாஸ்: மத்திய அரசு FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸை அறிமுகப்படுத்த உள்ளது. ‘இது பயணிகளுக்கு 'பெரிய நிவாரணத்தை' வழங்கும். இது நிதிச் சுமையைக் குறைக்கும். அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனத்தை நிறுத்த வேண்டிய அவசியமிருக்காது. ஆண்டொன்றுக்கு, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 200 சுங்கச்சாவடிகளைக் கடக்க ரூ.3,000-க்கு வருடாந்திர பாஸ் வழங்கும் திட்டம் ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்த புதிய முறையின் மூலம் ஒரு சுங்கச்சாவடியைக் கடப்பதற்கு சராசரியாக ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும். இது தற்போதைய சராசரியை விட கணிசமாகக் குறைவு. வழக்கமாக நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு ஆண்டுக்கு ரூ.7,000 வரை சேமிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT