Published : 22 Jun 2025 05:06 PM
Last Updated : 22 Jun 2025 05:06 PM
புதுக்கோட்டை மாவட்டத்தில் பலா பழம் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு உள்ளிட்ட பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் பலா மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு அறுவடை செய்யப்படும் பலா பழங்கள் அருகில் உள்ள மண்டிகள் மூலம் உள்ளூர், வெளி மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
வடகாடு பகுதி பலா பழம் ருசியாகவும், தித்திப்பாகவும் இருப்பதால், மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கான தனித்தன்மையை உலகெங்கும் பரவலாக்கும் விதமாகவும், விற்பனையை அதிகரிக்கும் விதமாகவும் வடகாடு பகுதி பலா பழத்துக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சியில் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மண்டிகளில் தற்போது பலாப் பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், விலையோ கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், வடகாடு பகுதி பலா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சேந்தன்குடி விவசாயி தங்க.கண்ணன் கூறியது: ஒரு கிலோ பலா பழம் ரூ.36-க்கு விற்பனை ஆகிய நிலையில், தற்போது ரூ.5-க்கும் குறைவாகவே விற்பனை ஆகிறது. சில மண்டிகளில் வேண்டா வெறுப்பாக பலா பழங்களை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். சிறிய அளவிலான பழங்களை வாங்கவே மறுக்கின்றனர். தோப்புகளிலும், கடைகளிலும் அழுகிய பழங்கள் அதிகம் உள்ளன. உள்ளூரில் விளைவிக்கப்படும் பலா பழத்துக்கு உரிய விலை கிடைக்காதது விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் மேற்கு பருவமழையால்தான் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ஆனால், அது தான் காரணமா?, அல்லது கூடுதல் லாபம் பெறுவதற்காக இதுபோன்ற காரணங்கள் வியாபாரிகளால் சொல்லப்படுகிறதா எனவும் சந்தேகம் எழுகிறது.
எனவே, விவசாயிகளின் விளை பொருளுக்கு உரிய விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். அதேபோல, வெளிப்படைத் தன்மையோடு வணிகம் நடைபெற வேண்டும். விவசாயிகளின் விளைபொருள் கேட்பாரற்ற நிலைக்கு ஒதுக்கப்படுவது கவலைக்குரியது. பலா பழத்தில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருட்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளை இப்பகுதியில் நிறுவ வேண்டும். பல ஆண்டுகளாக கிடப்பிலேயே போடப்பட்டு வரும் இக்கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இது குறித்து வேளாண் துறையினர் கூறியபோது, "பலா பழத்தில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. விரும்பினால், அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கு தயாராக இருக்கிறோம். அரசே பிரத்யேக தொழிற்சாலைகளை அமைப்பது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. புவிசார் குறியீடு பெறுவது ஆரம்ப கட்டத்திலேயேதான் உள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT