Last Updated : 21 Jun, 2025 05:09 PM

1  

Published : 21 Jun 2025 05:09 PM
Last Updated : 21 Jun 2025 05:09 PM

‘ஆன்மிக பொருளாதார மண்டலம்’ - சர்வதேச யோகா தின விழாவில் உத்தராகண்ட் முதல்வர் அறிவிப்பு

பராரிசைன் (உத்தராகண்ட்): உத்தராகண்ட்டின் கர்வால் மற்றும் குமாவோன் பிராந்தியங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு ஆன்மிக பொருளாதார மண்டலம் நிறுவப்படும் என்றும், இந்த மண்டலங்கள் ஆயுர்வேதம், யோகா மற்றும் ஆன்மிகச் சுற்றுலாவின் சர்வதேச மையங்களாக உருவாக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

11-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. உத்தராகண்ட்டின் கோடைக்கால தலைநகரான பராரிசைனில் நடைபெற்ற யோகா தின விழாவில் கலந்து கொண்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மாநிலத்தின் முதல் யோகா கொள்கையை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தினார்.

அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு வீட்டிலும் யோகா, ஒவ்வொரு நபருக்கும் ஆரோக்கியம் என்பதே சர்வதேச யோகா தினத்தின் நோக்கமாகும். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசின் ஆதரவுடன், கர்வால் மற்றும் குமாவோன் பிராந்தியங்கள் ஒவ்வொன்றிலும் ஓர் ஆன்மிக பொருளாதார மண்டலம் நிறுவப்படும். இந்த மண்டலங்கள் ஆயுர்வேதம், யோகா மற்றும் ஆன்மிகச் சுற்றுலாவின் சர்வதேச மையங்களாக உருவாக்கப்படும்.

சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்ற முதல்வர் புஷ்கர் சிங் தாமி

இந்த மண்டலங்கள் மாநிலத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை துரிதப்படுத்தும். மாநிலத்தில் இருந்து இடம்பெயர்வதைத் தடுக்க உதவும். உலகளாவிய நல்வாழ்வு மற்றும் யோகா துறையின் மையங்களாக இந்த மண்டலங்கள் மாறும். உலகம் முழுவதிலுமிருந்து யோகா பயிற்றுனர்கள், ஆயுர்வேத நிறுவனங்கள் மற்றும் ஆன்மிகத் தலைவர்கள் இந்த மண்டலங்களுக்கு அழைக்கப்படுவார்கள்.

புதிய யோகா கொள்கையின் கீழ், யோகா மற்றும் தியான மையங்களை நிறுவுவதற்கு ரூ.20 லட்சம் வரை மானியங்கள் வழங்கப்படும். யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். மார்ச் 2026-க்குள், அனைத்து ஆயுஷ் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களிலும் யோகா சேவைகள் உறுதி செய்யப்படும். 2030-ஆம் ஆண்டுக்குள், மாநிலம் முழுவதும் ஐந்து புதிய யோகா மண்டலங்கள் உருவாக்கப்படும்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x