Published : 21 Jun 2025 12:14 AM
Last Updated : 21 Jun 2025 12:14 AM
புதுடெல்லி: சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கும் பணத்தின் அளவு கடந்த ஆண்டு 3 மடங்காக அதிகரித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச அளவில் சுவிட்சர்லாந்து நாடு சுற்றுலாவுக்கு புகழ்பெற்றுள்ளது. அத்துடன் பெரும் பணக்காரர்கள் விரும்புவது சுவிஸ் வங்கிகள்தான். சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்பவர்களின் விவரங்கள் வெளியிடப்படுவதில்லை. அதுவே பணக்காரர்களுக்கு பாதுகாப்பாக கருதப்படுகிறது. அத்துடன், கரன்சியின் மதிப்பு குறைந்தாலும், பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டாலும், முதலீட்டாளர்களின் பணத்துக்கு சுவிஸ் வங்கிகள் பாதுகாப்பு வழங்குகின்றன. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், கோடீஸ்வர்கள் என பல தரப்பினரும் சுவிஸ் வங்கிகளில் பெரும் பணத்தை போட்டு வைக்கின்றனர்.
அதுபோல் இந்திய பிரபலங்கள் பலரும் சுவிஸ் வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ளதாகவும், இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து கறுப்பு பணத்தை எல்லாம் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைப்பதாகவும் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், கடந்த ஆண்டு இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்த பணம் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த 2024-ம் ஆண்டு 3.5 பில்லியன் பிராங்க் (சுவிஸ் கரன்சி) அளவுக்கு இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர். இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.37,600 கோடியாகும். கடந்த 2021-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியர்கள் செய்துள்ள அதிகபட்ச முதலீடாகும். அதேநேரத்தில் இந்திய வாடிக்கையாளர்கள் தனி நபர்களின் பெயர்களில் உள்ள பணம் இந்திய மதிப்பில் ரூ.3,675 கோடி மட்டுமே உள்ளது. இவ்வாறு சுவிஸ் தேசிய வங்கி ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியர்கள் பலர் வரி ஏய்ப்பு செய்தும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலமும் பெறும் கறுப்புப் பணத்தை சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்து வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
ஆனால், சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பணம் அத்தனையும் கறுப்புப் பணம் இல்லை. அதேநேரத்தில் வரி ஏய்ப்புகளுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்போம் என்று சுவிஸ் வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. இதுதொடர்பான விவகாரத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் யார் யார் கணக்கு வைத்துள்ளனர். எவ்வளவு பணம் டெபாசிட் செய்து வைத்துள்ளனர் என்ற விவரங்களை இந்திய அரசுக்கு சுவிஸ் அரசு வழங்கி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT