Published : 20 Jun 2025 11:00 AM
Last Updated : 20 Jun 2025 11:00 AM
இஸ்ரேலுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் ஈரானின் மிகப் பெரிய கிரிப்டோ கரன்சி பரிமாற்ற நிறுவனமான நோபிடெக்ஸில் இருந்து 90 மில்லியன் டாலர்களை திருடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.780 கோடியாகும்.
இதுகுறித்து பிளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்ட தகவல்: நோபிடெக்ஸ் கிரிப்டோகரன்சி திருட்டுக்கு பொறுப்பேற்றுள்ள ஹேக்கர்கள் குழு, “நோபிடெக்ஸில் எஞ்சியிருக்கும் சொத்துகள் இப்போது முழுமையாக பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன” என்று அதன் டெலிகிராம் கணக்கில் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானில் வேகமாக நடைபெற்று வரும் அணுசக்தி திட்டம் தொடர்பாக மேற்கத்திய தடைகளை தகர்க்கவும், போராளிகளுக்கு பணத்தை மாற்றவும் கிரிப்டோகரன்சி பரிமாற்றம் வாயிலாக நோபிடெக்ஸ் உதவியதாக அந்த குழு குற்றம்சாட்டியுள்ளது என்று பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோபிடெக்ஸ் நிறுவனம் ஹேக்கர்களின் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. அதன் செயலி மற்றும் வலைதளம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நோபிடெக்ஸ் நிறுவனத்தில், பிட்காயின், எத்திரியம், டாஜிகாயின் உள்ளிட்ட பல்வேறு கிரிப்டோகரன்சிகள் திருடப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில் ஈரான் கிரிப்டோகரன்சி சந்தையில் இந்த திருட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என்று செயினலிசிஸ் என்ற அந்த பகுப்பாய்வு நிறுவனத்தின் அதிகாரி ஆன்ட்ரூ பியர்மேன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT