Published : 19 Jun 2025 12:48 AM
Last Updated : 19 Jun 2025 12:48 AM
திருவனந்தபுரம்: இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்த கேள்விக்கு தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் கூறியதாவது: கடந்த 2022 முதல் மோதல்களும் இடையூறுகளும் உலகளாவிய காட்சியின் ஒரு பகுதியாக இருந்துவருகின்றன.
அவை மிகவும் தீவிரமாகவும் கணிக்க முடியாததாகவும் மாறிவிட்டன. இது உலகம் முழுவதும் அரசியல், பொருளாதாரம் அல்லது பாதுகாப்பு தொடர்பான ஒட்டுமொத்த சூழலையும் மிகவும் கடினமாக்குகிறது.
இன்றைய உலகளாவிய சூழல் இந்தியாவுக்கு மட்டுமல்ல, பல நாடுகளுக்கு, கிட்டத்தட்ட முழு உலகப் பொருளாதாரத்துக்கும் வளர்ச்சிக்கு மிகவும் சிக்கலானதாகவும் சவாலானதாகவும் மாறிவிட்டது என்று கூறலாம். ஆனால் இந்த சூழ்நிலைகளில், இந்தியா உண்மையில் ஒப்பீட்டளவில் பிரகாசமான இடமாக தனித்து நிற்கிறது. உலகப் பொருளாதாரம் நிச்சயமற்றதாக இருந்து வரும் சூழலில் இந்தியப் பொருளாதாரரம் பிரகாசமாக உள்ளது.
கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் மீட்சி அடைந்துள்ளது. வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளது. அதன் நிதி ஆரோக்கியத்தையும் மேம்படுத்தியுள்ளது. நாங்கள் நிதிப் பற்றாக்குறையை குறைத்து அரசுக் கடன் அளவை குறைத்துள்ளோம். இது முதலீட்டாளர்கள் இடையே நம்பிக்கையை வளர்க்க உதவியது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சுமார் 6.5 சதவீதமாக இருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT