Published : 18 Jun 2025 01:16 PM
Last Updated : 18 Jun 2025 01:16 PM
மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையில், போச்சம்பள்ளி பகுதியில் மாந்தோட்டங்களில் மரங்களை வெட்டி அகற்றி விட்டு, மாற்றுப் பயிர் சாகுபடிக்கு நிலத்தை சீர் செய்யும் பணியில் சிறு, குறு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேருக்கும் மேல் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் மாங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தில் மா விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்டு 1 லட்சத்துக்கும் அதிகமான சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் உள்ளனர். ஆண்டுதோறும் மா விவசாயிகள் பல்வேறு சிரமங்களையும், வருவாய் இழப்பையும் சந்தித்து வருவவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
நிகழாண்டில் மா மகசூல் அதிகரித்து, மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகளுக்கு அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், போச்சம்பள்ளி அருகே என்.தட்டக்கல், வீரமலை உள்ளிட்ட பகுதியில் உள்ள சிறு, குறு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உள்ள மா மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி அணை இடதுபுற பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சிவ குரு மற்றும் சில விவசாயிகள் கூறியதாவது: போச்சம்பள்ளி பகுதி விவசாயிகள் பலர் மாந்தோட்டங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை அடிப்படையாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதற்காக, ஆண்டு முழுவதும் மா மரங்களைப் பராமரித்து, பருவ காலங்களில் கிடைக்கும் வருவாய் மூலம் குழந்தைகளின் கல்வி, திருமணம், ஓராண்டுக்கான குடும்பச் செலவுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இயற்கை பேரிடர், பூச்சித் தாக்குதல், மாங்கூழ் ஆலை நிர்வாகத்தினர் சின்டிகேட் விலை நிர்யணம் உள்ளிட்ட காரணங்களால், மா விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டில் மாங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. இனியும் மாமரங்களைப் பராமரித்து செலவு செய்து, வருவாய் இழப்பைச் சந்திக்க வேண்டுமா என விவசாயிகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய தங்கள் தோட்டங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சில விவசாயிகள் மா மரங்களை வெட்டி அழித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மா சாகுபடி இருந்த நிலையில், தற்போது 35 ஆயிரம் ஹெக்டேராக சுருங்கிய நிலையில், வரும் ஆண்டுகளில் மேலும் குறையும் நிலையுள்ளது.
ஆந்திராவில் மா விவசாயிகளைக் காக்க அம்மாநில அரசு மா கொள்முதல் மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. ஆனால், இங்கு மா விவசாயிகள் புறக்கணிக்கபடுகின்ரனர். மாங்காய்க்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் கூட செய்யாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில் மா சாகுபடி பரப்பு வெகுவாக குறையும். எனவே, தமிழக அரசு மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தொலைநோக்கு திட்டங்களை வகுக்க வேண்டும்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT