Published : 17 Jun 2025 05:58 PM
Last Updated : 17 Jun 2025 05:58 PM
சேலம்: தமிழகத்தில் பால் கையாளும் திறனை நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டரிலிருந்து, 70 லட்சம் லிட்டராக உயர்த்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சேலம் ஆவின் பால் பண்ணையில் ரூ.51.62 கோடி செலவில் அமைக்கப்பட்ட நாளொன்றுக்கு 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அதிநவீன தானியங்கி பால் பதப்படுத்தும் தொழிற்சாலையை, தமிழக முதல்வர் கடந்த 12-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த ஆலையைப் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று பார்வையிட்டு, ஆலையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் விவசாயிகள் தங்களது மாடுகள் மூலம் சராசரியாகத் தினமும் சராசரியாக 6 முதல் 7 லிட்டர் பால் உற்பத்தி செய்கின்றனர். இதனை 10 முதல் 12 லிட்டராக உயர்த்திவிட்டால், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்துவிடும். அதற்கான நவீனத் தொழில்நுட்பங்களைக் கையாள்வது குறித்து பால் உற்பத்தியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், உற்பத்தியாளர்களுக்குப் பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. முதல்வரிடம் வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, தற்போது ரூ.3 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும் பாலின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக, தரமான பால் வழங்கக்கூடிய விவசாயிகளுக்குக் கூடுதலாக ரூ.1. வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சேலம் ஆவின் மூலம் கால்நடை வாங்குவதற்குக் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.78 கோடி கடனுதவியும், ரூ.64 கோடி வட்டியில்லா கால்நடை பராமரிப்புக் கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. விவசாய மக்களுக்கு லாபத்தில் ஒரு பங்காக, ரூ.6.50 கோடி மற்றும் போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அளவில் நாள்தோறும் 50 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ள நிலையில், விரைவில் 70 லட்சம் லிட்டராக உயர்த்த பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்வதை நியாயமான விலையில் ஆவின் நிறுவனம் செய்கிறது. ஆவின் என்ற துறை இருப்பதால் மட்டுமே பாலுக்கு நியாயமான விலை கிடைத்து வருகிறது.
ஆவின் மூலம் தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.365 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்கப்படும்.
அமுலுக்கும் ஆவினுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அது கார்ப்பரேட் வகை நிறுவனம், ஆவின் அப்படியல்ல. விவசாயிகளின் நலன், பால் வாங்குவோரின் நலன் பார்க்கப்படுகிறது. ஆவின் கடைகளில் மற்ற பொருள்களை வைத்து விற்பனை செய்வது கவனத்துக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT