Published : 17 Jun 2025 03:00 PM
Last Updated : 17 Jun 2025 03:00 PM
விருதுநகர்: நில அளவைகளை துல்லியமாக்கும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீமயமாக்கும் திட்டம் இன்று (ஜூன் 17) தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக இத்திட்டம் 10 நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நில அளவை மற்றும் நிலவரித்துறை மூலம் தமிழகத்தில் உள்ள நில ஆவணங்களை நவீனமயமாக்கும் (நக்ஷா) திட்டம் முதல்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், சிவங்கை மாவட்டம்- காரைக்குடி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கோவை மாநகராட்சி 7 வார்டுகள், விருதுநகர் ஆகிய நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வருவாய்த்துறை நில அளவை ஆவணங்களும், நகராட்சி நிர்வாகத்தின் சொத்து வரி விபரங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு இணைய வழியில் கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்துக்கான அளவுகள் மற்றும் பரப்புகளை அமைவிடப் புள்ளி விவரங்களுடன் மிகத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.10.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் தொடக்க விழா விருதுநகரில் இன்று நடைபெற்றது. கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு நவீன ட்ரோன் மூலம் நகர நில அளவைப் பணிகளைத் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின்கீழ் 13.85 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 49,886 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
1.67 கோடி இணைய வழி பட்டா மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சுமார் 41.7 லட்சம் இணைய வழி பட்டா மாறுதல் உத்தரவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார். இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்துறை இயக்குநர் மதுசூதணன் ரெட்டி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், நகராட்சித் தலைவர் மாதவன், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT