Last Updated : 16 Jun, 2025 07:39 PM

 

Published : 16 Jun 2025 07:39 PM
Last Updated : 16 Jun 2025 07:39 PM

அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு ‘எம்எஸ்எம்இ நண்பன்’ விருது வழங்கல்!

புதுடெல்லி: தமிழ்நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு ‘எம்எஸ்எம்இ நண்பன்’ விருது வழங்கப்பட்டுள்ளது. இது அமைச்சரின் சிறந்த மேலாண்மை, தொழில் முனைவோர் வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பு உள்ளிட்டவைக்காகப் பாராட்டி ஜெர்மனி வாழ் தமிழர்கள் அமைப்பான ‘ஜெர்மன் இந்தியன் பிஸ்னஸ் அலையன்ஸ் (ஜிஐபிஏ)’ சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் துறை அமைச்சராக இருப்பவர் தா.மோ.அன்பரசன். இவர், பாரீஸில் நடைபெறும் சர்வதேச ஸ்டாரட் - அப் கருத்தரங்களில் கலந்து கொள்வதற்காக ஐரோப்பிய நாடுகள் பயணத்தில் உள்ளார். இவருடன் ஸ்டார்ட் - அப் தமிழ்நாடு நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சிவராஜா ராமநாதன், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள், சில ஸ்டார் - அப் மற்றும் தொழில் முனைவோர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உடன் பயணிக்கின்றனர்.

இவர்களில் அமைச்சர் அன்பரசன் மற்றும் நிர்வாக அதிகாரி ராமநாதன் நேற்று முன்தினம் ஜெர்மனியின் ஃபிராங்க் பேர்ட் வந்தனர். அப்போது, ஃபிராங்பேர்ட் தமிழ் சங்கம் சார்பிலான விழாவில் அமைச்சர் அன்பரசனுக்கு எம்எஸ்எம்இ நண்பன் விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த மேலாண்மை, தொண்டாற்றும் மனப்பான்மை மற்றும் தொழில்முனைவோர் வளர்ச்சிக்கான சிறந்த பங்களிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக இந்த எம்எஸ்எம்இ நண்பன் (Friend of MSMEs) விருதை, அமைச்சர் அன்பரசனுக்கு ஜிஐபிஏ வழங்கியது.

இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு அமைச்சர் அன்பரசன் கூறுகையில், ‘எம்எஸ்எம்இ நண்பன் விருதிற்கு மிக்க நன்றி. ஜிஐபிஏ அமைப்பு, கோயம்புத்தூரில் வரும் அக்டோபர் 9, 10-தேதிகளில் தமிழ்நாடு அரசு நடத்தும் சர்வதேச ஸ்டார்ட் - அப் சமித்திற்கும் வெளிநாட்டினர் பங்குபெற உதவுகிறது. எங்கள் முதல்வர் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை டிரில்லியன் டாலராக்கும் நோக்கம் கொண்டுள்ளார்.

இதற்கு ஸ்டார்ட்-அப்புகள் முக்கியப் பங்கு வகிக்க உள்ளன. முதல்வரின் எல்லோருக்கும் எல்லாம் கொள்கையின்படி 11,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் - அப்.களில் 50 சதவிகிதமாக மகளிர் தொழில் முனைவோர் இடம்பெற்றுள்ளனர்’ என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஜெர்மனியின் இந்த ஜிஐபிஏ சார்பில் ‘ஸ்டார்ட் - அப் சாம்பியன்’ எனும் பெயரில் மற்றொரு பெருமைக்குரிய விருதும் வழங்கப்படுகிறது. இந்த 2025-ம் வருடத்திற்கான ஸ்டார்ட் -அப் சாம்பியன் விருதை தமிழ்நாடு ஸ்டார்ட் -அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜா ராமநாதன் பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு ஸ்டார்ட் - அப் நிறுவனம், தொழில்முனைவோர்களை வலுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தியதற்கும், புதுமை, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக ஊக்கத்தை ஊட்டியதற்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது. இவ்விழாவில் பிராங்க் பேர்ட் தமிழ் சங்கத் தலைவர் பாலாஜி அனைவரையும் வரவேற்றார்.

இந்திய துணைத் தூதரகத்தின் கவுன்சில் ஜெனரல் பி.எஸ்.முபாரக் தலைமை வகித்தார். ஜிஐபிஏ சார்பில் பி.செல்வகுமார் மற்றும் க.நிர்மல் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜெர்மனியின் மூன்சென் நகரில் தலைமையிடமாகக் கொண்ட ஜிஐபிஏ, இந்தியா மற்றும் ஜெர்மனி இடையிலான அனைத்து வகைகளில் இணைப்பாக செயல்படுகிறது.

இது, இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்த மாநிலங்களின் வணிகம், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிக்கும் பாலமாக செயல்படுகிறது. ஜெர்மனியில் தமிழ்நாடு அரசின் டெஸ்க் நடத்தும் பொறுப்பும் ஜிஐபிஏ ஏற்றுள்ளது. இதற்காக, தமிழக அரசின் வெளி நாடு வாழ் தமிழர்கள் நல வாரியம், தென் இந்திய வர்த்தக சபை (SICCI) மற்றும் ஜிஐபிஏ (GIBA) ஆகிய மூன்றும் இணைந்து கடந்த ஜனவரியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

இந்த டெஸ்க் வணிகம், கலாச்சாரம், சுற்றுலா, கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளின் மேம்பாட்டிற்காகச் செயல்படுகிறது. இதேபோல், ஜிஐபிஏ-விற்காக இந்தோ ஜெர்மன் ஸ்டார்ட் -அப் இன்குபேட்டர் கோயம்புத்தூரில் துவங்கவும் தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x