Published : 15 Jun 2025 01:22 PM
Last Updated : 15 Jun 2025 01:22 PM
இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஒரே நாளில் 2 முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் உட்பட பல நகரங்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் ராணுவ தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையே போர் வலுத்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்துள்ள நிலையில், இஸ்ரேல் மீது ஈரானும், ஹவுதி கிளர்ச்சிப் படையும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இவ்வாறாக இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை நேற்று ஒரே நாளில் பேரலுக்கு 6 டாலர் உயர்ந்து 78 டாலரானது. இதன்மூலம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைக்கு சென்றது. எனினும், இறுதியில் 74 டாலராக நிறைவடைந்தது. இந்த போர் தீவிரமானால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என தெரிகிறது.
இது குறித்து எஸ் அன்ட் பி குளோபல் தலைவர் ரிச்சர்டு ஜோஸ்விக் கூறும்போது, “இஸ்ரேல் - ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளது. ஆனால், ஏற்றுமதி பாதிக்கப்படுமா என்பதுதான் முக்கியம். கடந்த முறை ஈரானும் இஸ்ரேலும் மாறி மாறி தாக்குதல் நடத்தியபோது, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. பின்னர், போர் தீவிரமடையவில்லை என்றும், எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிந்தவுடன் அவற்றின் விலை சரிந்தது.” என்றார்.
ஈரானிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யவில்லை. ஆனாலும், நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்தே இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்தச் சூழலில், இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக சரக்கு போக்குவரத்து தடைபட வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக, உலக அளவிலான கச்சா எண்ணெய் சரக்கு போக்குவரத்தில் 20% ஈரானுக்கு வடக்கே உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுகிறது. இதனால், இராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT