Last Updated : 13 Jun, 2025 01:28 PM

3  

Published : 13 Jun 2025 01:28 PM
Last Updated : 13 Jun 2025 01:28 PM

தமிழகத்தில் மாங்காய் கொள்முதல் செய்ய ஆந்திராவில் தடை - தாக்கம் என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய விலை கிடைக்காததால், அறுவடை செய்யப்பட்ட மாங்காய்கள் குந்தாரப்பள்ளியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ளது.

ஆந்திராவில் மா கொள்முதல் செய்ய மானியம் வழங்குவதால், வெளிமாநிலங்களில் இருந்து மாங்காய்கள் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேரில் ஆண்டுக்கு 1,50,000 மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சுவை மிகுந்த ரகங்களான அல்போன்ஸா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, மல்கோவா, பீத்தர் போன்ற வகை மாம்பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். நிகழாண்டில் பெய்த மழையால் இரட்டிப்பு மகசூல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நோய் தாக்கம், விலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மா ரகங்களில், 80 சதவீதம் தோத்தாபுரி எனப்படும் பெங்களூரா ரகம் தான். இந்த மாங்காய்கள் அதிகளவில் மாங்கூழ் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் 2 முறை மா முத்தரப்பு கூட்டம் நடத்தியும், மாவிற்கான கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படாததால், போதிய வருவாய் கிடைக்காததால், விவசாயிகள் மாங்காய்களை பறித்து சாலையோரம் வீசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பயனில்லா முத்தரப்பு கூட்டங்கள்: இது குறித்து மா விவசாயிகளின் கூட்டமைப்பின் தலைவர் சவுந்திரராஜன் மற்றும் விவசாயிகள் கூறும்போது, மாவிற்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய 2 முறை முத்தரப்பு கூட்டம் நடத்தியும் எவ்வித பயனும் இல்லை. தற்போது தோத்தாபுரி ரக மாங்காய்கள் மண்டிகளில் கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரையிலும், மாங்கூழ் தொழிற்சாலை நிர்வாகத்தினர் ரூ.5 முதல் ரூ.6 வரையிலும் கொள்முதல் செய்கின்றனர்.

இதனால், தோட்டம் பராமரிப்பு, அறுவடை கூலி கூட கிடைப்பதில்லை. சீசன் தொடங்கியபோது கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு மாங்காய்கள் கிடைப்பதாக வியாபாரிகள், மாங்கூழ் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்து, விலையை உயர்த்தி வழங்க மறுத்துவிட்டனர்.

ஆந்திர விவசாயிகளுக்கு பாதுகாப்பு: ஆந்திர மாநிலத்தில் மாவிவசாயிகளை காக்கும் வகையில், சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த முத்தரப்புக் கூட்டத்தில் மாவிற்கான கொள்முதல் விலை ரூ.12 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், தொழிற்சாலை நிர்வாகத்தினர் ரூ.8-ம், அரசு மானியமாக ரூ.4-ம் வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டு, மா கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து மாங்காய்கள் கொள்முதல் செய்தால், அம்மாநிலத்தில் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், தடை விதித்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் மா விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படுவதில்லை.

தோட்டக்கலை, வேளாண் வணிகத்துறை, வேளாண்மைத் துறை அலுவலர்களிடையே உரிய திட்டமிடல் இல்லை. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதும் இல்லை. தற்போது விலை கிடைக்காததால், தோட்டங்களை பராமரிக்க வேண்டி இருப்பதால் விவசாயிகள் மா அறுவடை செய்து சாலையோரங்களில் கொட்டிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் ஆந்திர மாநில அரசைப் போல், தமிழக அரசும் மா விவசாயிகள், மாங்கூழ் தொழிற்சாலைகளை காக்க, கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து, மானியம் வழங்க முன்வர வேண்டும். நிகழாண்டில் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு ரொக்கமாக வழங்க வேண்டும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x