Published : 12 Jun 2025 06:13 PM
Last Updated : 12 Jun 2025 06:13 PM
நியூயார்க்: அகமதாபாத் விமான விபத்தை அடுத்து, அமெரிக்காவின் விமான உற்பத்தி நிறுவனமான போயிங்கின் பங்குகள் NASDAQ-இல் சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் 8% சரிந்தன.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு இன்று மதியம் 1.38-க்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-7 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விமானத்தில், பயணித்த 242 பேரில், 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், 7 பேர் போர்ச்சுக்கீசிய நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், விபத்துக்குள்ளான விமானம் போயிங் நிறுவன தயாரிப்பு என்பதால், அமெரிக்காவின் NASDAQ பங்குச் சந்தையில், அதன் பங்குகள் 8.02% சரிவைச் சந்தித்து, $196.83 எனும் விலைக்கு விற்பனையாகியது. இது சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தின் சரிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. NASDAQ சந்தை காலை 9 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு) திறக்கப்படும்.
விபத்தை அடுத்து போயிங் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "விபத்துக்குள்ளான விமானம் 171 தொடர்பாக ஏர் இந்தியாவுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், அவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம். எங்கள் எண்ணங்கள் பயணிகள், பணியாளர்கள், முதலுதவி அளித்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் உள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து குறித்து ஏர் இந்தியா தலைவர் என் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் 171, இன்று ஒரு துயர விபத்தில் சிக்கியதை ஆழ்ந்த துக்கத்துடன் உறுதிப்படுத்துகிறேன். இந்த பேரழிவு தரும் நிகழ்வால் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் எங்கள் எண்ணங்களும் ஆழ்ந்த இரங்கல்களும் உள்ளன.
இந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் அவர்களது குடும்பத்தினரையும் ஆதரிப்பதே எங்கள் முதன்மை கவனம். சம்பவ இடத்தில் அவசரகால மீட்புக் குழுக்களுக்கு உதவவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் பராமரிப்பையும் வழங்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். மேலும் சரிபார்க்கப்பட்ட தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கும்போது மேலும் புதுப்பிப்புகள் பகிரப்படும். அவசர மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது மற்றும் தகவல் தேடும் குடும்பங்களுக்கு ஆதரவு குழு அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT