Published : 12 Jun 2025 06:05 AM
Last Updated : 12 Jun 2025 06:05 AM
சென்னை: ரயில் பயணிகள் தத்கல் டிக்கெட் எடுக்க ஜூலை 1-ம் தேதி முதல் ஆதார் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அவசரகால ரயில் பயணங்களுக்கு உதவ தத்கல் மற்றும் ப்ரீமியம் தத்கல் முன்பதிவு முறையைப் பயன்படுத்தலாம். மொத்த டிக்கெட்டுகளில் 30 சதவீதம் தத்கல் முறைக்கு ஒதுக்கப்படுகிறது.
தத்கல் டிக்கெட்டை ரயில் நிலைய கவுன்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக பதிவு செய்யமுடியும். பெரும்பாலான ரயில்களில் தத்கல் முறையில் முன்பதிவு தொடங்கும் 5 நிமிடங்களுக்குள் டிக்கெட்கள் விற்பனையாகிவிடும். இதனால் பெரும்பாலான பயணிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
மேலும், தத்கல் முன்பதிவு முறையில் முறைகேடு நடப்பதாகவும், அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதாகவும் பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனடிப்படையில் 2.5 கோடி போலி கணக்குகளை ஐஆர்சிடிசி நீக்கியது.
இதற்கிடையே, பயணிகளுக்கு உதவும் வகையில் தத்கல் முன்பதிவு முறையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த 3-ம் தேதி அறிவித்தார்.
இதையடுத்து, தத்கல் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றங்களை ரயில்வே வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செல்போன் செயலியில் ஜூலை 1-ம் தேதி முதல் தத்கல் டிக்கெட் முன்பதிவை, ஆதார் எண்ணை உறுதிப்படுத்திய பயனாளர்களால் மட்டும் மேற்கொள்ள முடியும். மேலும், ஜூலை 15-ம் தேதி முதல் ஆதாருடன், ஓடிபி அடிப்படையிலான உறுதிப்பாடும் கட்டாயமாக்கப்படுகிறது.
ரயில் நிலைய கவுன்டர்களில் தத்கல் முன்பதிவு செய்வோர் மட்டுமின்றி, அங்கீகாரம் பெற்ற முகவர்கள், நேரடியாக செல்போன் மூலம் தத்கல் டிக்கெட் பெறுவோரும், செல்போனுக்கு அனுப்பப்படும் ஓடிபியை உறுதிப்படுத்திய பின்பே தத்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.
மேலும், ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தத்கல் முன்பதிவு தொடங்கும் நேரத்தில் முதல் 30 நிமிடங்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதன்படி, குளிர்சாதனப் பெட்டிகளில் காலை 10 முதல் 10:30 மணி வரையும், இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுக்கு காலை 11 முதல் 11:30 மணி வரையும் பொதுமக்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இதுகுறித்து ஓய்வுபெற்ற மூத்த ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் மனோகரன் கூறும்போது, “அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை தத்கல் முறையில் பதிவு செய்ய முதல் 30 நிமிடங்கள் அனுமதிக்காமல் இருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், ரயில்வே கவுன்ட்டர்களில் ஆதார் இணைக்கப்பட்ட செல்போன்களுக்கு ஓடிபி அனுப்புவதில் நடைமுறை சிக்கல் ஏற்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT