Published : 11 Jun 2025 06:09 AM
Last Updated : 11 Jun 2025 06:09 AM
சென்னை: விவசாயிகளின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் வகையில் 35 புதிய பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சானக்கொல்லிகள் மற்றும் உயிரி உரங்களை கோத்தாரி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வேளாண் துறையில் பாரம்பரிய நிறுவனமான கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் நிறுவனம், விவசாயத்துக்குத் தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லிகள், ஊட்டச்சத்து மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது விவசாயிகளின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் வகையில் 35 புதிய பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சானக்கொல்லிகள், உயிரி-உரங்கள் மற்றும் திரவ உரங்களை தயாரித்துள்ளது.
இதன் அறிமுக விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கோத்தாரி நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கோத்தாரி நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஜே.ரபீக் அகமது, நிர்வாக துணை தலைவர் கார்த்திகேயன், ஆலோசகர் ஜெயந்த் முரளி ஆகியோர் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினர்.
மேலும், ட்ரோன் சாதனம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயிர்களுக்கு தெளிக்க விவசாயிகள் பதிவு செய்வதற்கான பிரத்யேக செயலியையும் (Tech Kothari), ஹெல்ப்லைன் வசதியையும் (9095290953) அறிமுகம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ரபீக் அகமது கூறியதாவது: கோத்தாரி நிறுவனத்துக்கும் விவசாயிகளுக்கும் இடையே நீண்ட காலமாக உறவு இருந்து வருகிறது. தற்போது விவசாயிகள் பயன்பெறும் வகையில் 35 புதிய மருந்துகள், உயிரி உரங்கள், திரவநிலை மருந்துகளை அறிமுகப்படுத்தி உள்ளோம். முக்கிய அம்சமாக ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்துகளை தெளிக்க பிரத்யேக செயலி மற்றும் ஹெல்ப்லைன் மூலமாக பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாதாரணமாக ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர்களுக்கு மருத்து தெளிக்க அரை நாட்கள் ஆகிவிடும். ஆனால், ட்ரோன்கள் மூலம் ஒரு ஏக்கர் பயிருக்கு ரூ.500 கட்டணத்தில் 10 நிமிடத்தில் மருந்துகளை தெளித்து முடித்துவிடலாம். விவசாயிகள் எங்களுக்கு தகவல் தெரிவித்தால் ட்ரோன் சாதனம், மருந்துகள், ஜெனரேட்டர் வசதியுடன் கூடிய வாகனம் உடனடியாக வந்துவிடும்.
மதுரையில் எங்களின் ட்ரோன் தயாரிப்பு மற்றும் பைலட் பயிற்சி நிறுவனம் இய.ங்கி வருகிறது. இதன்மூலம் தேவையான ட்ரோன் பைலட்கள் உருவாக்கப்பட்டு இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். குறைந்த செலவில் ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்துகள் தெளிக்கும் எங்களின் இந்த புதிய முயற்சி வேளாண் துறையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். வரும் காலத்தில் விவசாய நிலங்களுக்கு மருந்து தெளிப்பதற்கு ட்ரோன்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய சூழல் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT