Published : 11 Jun 2025 05:52 AM
Last Updated : 11 Jun 2025 05:52 AM
சென்னை: ‘இந்தியாவில் மின்னணு சாதனங்களின் உற்பத்தி மையமாக தமிழகம் திகழ்கிறது’ என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். தமிழ் மொழிக்காக பிரத்யேகமாக செயற்கை நுண்ணறிவு பணிகளை உருவாக்க ‘தமிழ் ஏஐ’ எனும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதற்காக சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா மற்றும் டெபோ டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளது. அதன்படி தமிழ் செயற்கை நுண்ணறிவு (தமிழ் ஏஐ) திட்டத்தின் தொடக்க விழா சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசியதாவது: இந்திய மொழிகள், குறிப்பாக தமிழ் மொழி ஏஐ துறையில் ஒருங்கிணைக்கப்படுவதில் இத்திட்டம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த திட்டத்தில் பொதுவாக பயன்படுத்தக்கூடிய கணினி வசதிகள் மற்றும் பல்வேறு சமூகங்களுக்கான செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் உருவாக்கப்படுகின்றன.
இதன்மூலம் இந்தியாவின் பல்வகை சமூகங்களும், மொழிகளும் ஏஐ தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட முடியும். உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ், ஏஐ தொழில்நுட்பத்துடன் இணைவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகும்.
தமிழ் ஏஐ 11 மாதங்களில் செயலியாக வரும். அடுத்தாண்டு சாட்ஜிபிடி போன்று அனைத்து தகவல்களையும் வழங்கும் முகமையாக செயல்படுத்தப்படும். இந்த ஏஐ தொழில்நுட்பத்தை ரயில்வே துறையிலும் பயன்படுத்தலாம்.
இதுதவிர, தமிழகம் மின்னணு உற்பத்தியின் மையமாக செயல்படுகிறது. தற்போது மின்னணு உற்பத்தி, செல்போன், லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் புதிய மின்னணு உற்பத்தி மையம் அமைக்க சமீபத்தில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. விரைவில் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கும். இந்த முயற்சிகள் தமிழகத்தை தொழில்நுட்ப வளர்ச்சியில் முதன்மைக்குக் கொண்டு செல்லும்.
அதேபோல், எலெக்ட்ரானிக் துறையின் தலைமையகமாக தமிழகத்தை உருவாக்க வேண்டுமென பிரதமர் மோடி பலமுறை கூறியுள்ளார். அது தற்போது நிறைவேறி வருகிறது. ஏற்கெனவே வந்தே பாரத் ரயில் உற்பத்தி மையமாக தமிழகம் திகழ்கிறது. விரைவில் ரயில் வீல் உற்பத்தி தொழிற்சாலை சென்னை அருகே வரவுள்ளது. அப்போது ரயில்வே துறையில் தமிழகம் முதன்மையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் மலேசியா நாட்டின் தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT