Published : 08 Jun 2025 02:20 AM
Last Updated : 08 Jun 2025 02:20 AM
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக நேற்று பவுனுக்கு ரூ.1,200 குறைந்தது. இதனால், ஒரு பவுன் ஆபரண தங்கம் விலை ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்கா - சீனா இடையே நிலவிய வர்த்தக போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, தங்கம் விலை கடந்த மே 12-ம் தேதி ரூ.2,360 வரை குறைந்து ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்த நிலையில், மே 28-ம் தேதி முதல் மீண்டும் உயர தொடங்கியது. குறிப்பாக, ஜூன் 2-ம் தேதி பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதன்பின்னர், விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த 5-ம் தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.73 ஆயிரத்தை தாண்டியது. அன்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.9,130, ஒரு பவுன் விலை ரூ.73,040 ஆக இருந்தது.
தொடர்ந்து தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்று திடீர் சரிவை சந்தித்தது. ஒரு கிராமுக்கு ரூ.150 என பவுனுக்கு ரூ.1,200 விலை குறைந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.8,980-க்கும், ஒரு பவுன் ரூ.71,840-க்கும் விற்பனையானது.
24 காரட் தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.9,796, ஒரு பவுன் ரூ.78,368 என்ற அளவில் இருந்தது.
இதேபோல, வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.117 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1.17 லட்சமாகவும் இருந்தது.
இதுகுறித்து சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியபோது, ‘‘சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் (31.10 கிராம்) கடந்த வாரம் 3,375 டாலராக இருந்தது. இது தற்போது 3,310 டாலராக குறைந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை குறைந்துள்ளது. வரும் வாரத்தில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT