Published : 06 Jun 2025 05:03 PM
Last Updated : 06 Jun 2025 05:03 PM

இந்தியா - பாக். மோதலின் பொருளாதார தாக்கம் எத்தகையது? - ஆர்பிஐ கவர்னர் விவரிப்பு

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட மோதல் என்பது பொருளாதார நடவடிக்கைகளில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியது என்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்.22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே 7-ம் தேதி இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பயங்கரவாதிகளின் நிலைகள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானும் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இந்த நேரத்தில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "அந்த தாக்குதலால் மிக மிகக் குறைவாக சிறிய அளவிலேயே பொருளாதார பாதிப்புகள் இருந்தன. அந்த நேரத்தில் அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் மட்டுமே சிறிய பாதிப்புகள் இருந்தன. விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால் விமானப் போக்குவரத்து நிச்சயமாக குறைந்திருந்தது. ஆனால், விநியோகச் சங்கிலியில் பெரிய தடங்கள் எதுவும் ஏற்படவில்லை.

அதனால், இது பொருளாதார நடவடிக்கைகள், வளர்ச்சி, பணவீக்கம் போன்றவற்றை பாதிக்காது. சில நாட்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் விலைகள் சற்று உயர்ந்திருந்தன. அவை இப்போது இயல்புக்கு திரும்பியுள்ளன. இது பொருளாதாரத்தில் எந்தப் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தாது. தற்போது அதிகரித்து வரும் கரோனா பரவல் பற்றி இப்போதைக்கு கவலைக் கொள்ள தேவையில்லை. கரோனா என்பது இப்போது சாதாரண வைரஸ்களில் ஒன்றாக மாறிவிட்டது என்று நினைக்கிறேன். அது அப்படியே இருக்கும் என்றும் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x