Published : 04 Jun 2025 07:29 AM
Last Updated : 04 Jun 2025 07:29 AM

இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த பங்கு மீண்டும் முதலிடத்தை பிடித்த எம்ஆர்எப் நிறுவனம்

மும்பை: இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த பங்கு என்ற பெருமையை டயர் தயாரிப்பு நிறுவனமான எம்ஆர்எப் மீண்டும் பெற்றுள்ளது. கடந்த 2024 அக்டோபர் 29-ம் அன்று நடைபெற்ற வர்த்தகத்தில் எம்ஆர்எப் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி மிகவும் விலை உயர்ந்த பங்கு என்ற பெருமையை எல்சிட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா நிறுவனம் பெற்றது.

ஒரே அமர்வில் வியக்க வைக்கும் அளவில் எல்சிட் பங்கின் விலை 66,92,535 சதவீதம் உயர்ந்து ரூ.2,36,250 ஆனது. பங்குச் சந்தை வரலாற்றில் ஒரு நிறுவன பங்கின் விலை வெறும் ரூ.3.53-லிருந்து ஒரே வர்த்தக நாளில் ரூ.2,36,250-ஆக அதிகரித்தது அதுவே முதல்முறை.

இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் எம்ஆர்எப் பங்கின் விலை ரூ.1,37,834-ல் நிலைபெற்றது. இது, எல்சிட் இன்வெஸ்ட்மென்டின் பங்கு இறுதியில் நிலைபெற்ற விலையான ரூ.1,29,300-ஐ காட்டிலும் அதிகம். கடந்த ஆறு மாதங்களில் குறைவான செயல்திறன் இருந்தபோதிலும், எம்ஆர்எப் பங்குகள் இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த பங்குகளின் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை தக்கவைத்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

எல்சிட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் ரிசர்வ் வங்கியில் முதலீட்டு நிறுவன பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வங்கிசாரா நிதி நிறுவனமாகும். இந்நிறுவனம் தற்போது அதன் சொந்த செயல்பாட்டு வணிகத்தைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அது ஏஷியன் பெயிண்ட்ஸ் போன்ற பிற பெரிய நிறுவனங்களில் அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x