Last Updated : 03 Jun, 2025 05:07 PM

 

Published : 03 Jun 2025 05:07 PM
Last Updated : 03 Jun 2025 05:07 PM

சிறிய ஜவுளி பூங்கா திட்டத்தில் ரூ.2.5 கோடி வரை அரசு மானியம் - கோவை தொழில்முனைவோருக்கு அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் | கோப்புப் படம்

கோவை: சிறிய அளவிலான ஜவுளி பூங்கா திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி அரசு மானியமாக பெறலாம். இந்தச் சலுகையை தொழில் துறையினர் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஜவுளித்துறையில் பல்வேறு பிரிவுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்று முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழக ஜவுளித்துறை வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் 2022-ம் ஆண்டு துணிநூல் துறை உருவாக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழக அரசால் தற்போது சிறிய அளவிலான ஜவுளி பூங்கா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலத்தில் மூன்று தொழில் முனைவோர்களால் மூன்று தொழிற்கூடங்கள் அமைக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் 50 சதவீத தொகை அல்லது ரூ.2.50 கோடி என இவற்றில் எது குறைவோ அது அரசு மானியமாக வழங்கப்படும்.

தொழில்முனைவோர் பயன்பெறும் வகையில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி உள்கட்டமைப்பு வசதிகள், தொழில் தொடர்பான பொது சேவை கட்டிடங்கள், தொழிற்கூடங்கள் ஆகிய இனங்கள் மானியம் பெற தகுதி பெறும் இனங்கள் ஆகும். மேற்படி மானியத் தொகை பணி முன்னேற்றத்தின் அடிப்படையில் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திருப்பூர், கரூர், ஈரோடு, தர்மபுரி, திருவள்ளூர், திண்டுக்கல் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 19 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்களுக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டு பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நூற்பாலைகளை தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் நவீனப்படுத்தவும், வளர்ச்சியினை ஊக்குவிக்கவும் நூற்புபிரிவுக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு சிறப்பு திட்டம் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இயந்திரங்களை மாற்றி புதிய இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு பெறப்படும் கடனிற்கு செலுத்தப்படும் வட்டிக்கு மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

2024 டிசம்பர் 9-ம் தேதிக்கு பின் வங்கிக்கடன் பெற்று இயந்திரங்கள் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெற இயலும். ரிங் ஸ்பின்னிங்,ஓபன் எண்ட் ஸ்பின்னிங், ஏர்ஜெட் ஸ்பின்னிங் பிரிவில் உள்ள நூற்பாலைகள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெறலாம். மேற்கண்ட திட்டங்களின்கீழ் பயன் பெற விரும்பும் தொழில்முனைாவர் மண்டல துணிநூல் துணை இயக்குநர் அலுவலகத்தை 0421-2220095 என்ற தொலைபேசி எண்ணிலும் rddtextilestpr@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x