Published : 02 Jun 2025 07:01 PM
Last Updated : 02 Jun 2025 07:01 PM
புதுடெல்லி: கொஞ்சம் ஓய்வெடுக்குமாறும், இந்தியாவுக்குச் செல்லுமாறும் எலான் மஸ்க்குக்கு அறிவுரை வழங்குவேன் என்று அவரது தந்தை எரோல் மஸ்க் தெரிவித்துள்ளார்.
பிரபல அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க், மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, சமூக ஊடக தளமான எக்ஸ், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவராக உள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவுவது, செயற்கைக்கோள் அடிப்படையில் இணைய சேவை வழங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சேவையை இந்தியாவில் தொடங்குவது தொடர்பாக எலான் மஸ்க் நிறுவனம், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா வர எலான் மஸ்க் திட்டமிட்டிருந்தார். எனினும், பின்னர் அந்தப் பயணம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இந்தியா வந்துள்ள எலான் மஸ்க்கின் தந்தையும், தென்னாப்பிரிக்க தொழிலதிபருமான எரோல் மஸ்க், தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நான், எனது மகனுக்கு ஆலோசனை சொல்வதாக இருந்தால், கொஞ்சம் ஓய்வெடுங்கள் என்று கூறுவேன். அவருக்கு (எலான் மஸ்க்) 53 வயதாகிறது. இந்த வயதில் இருப்பவர்கள், 'ஓ, நாங்கள் மிகவும் வயதானவர்கள்' என்று கூறுகிறார்கள். ஆனால் அவர் 30-களின் முற்பகுதியில் உள்ள ஒருவரைப் போல் உள்ளார்.
அதோடு, அவரை இந்தியாவுக்குச் செல்லுமாறு அறிவுறுத்துவேன். அவர் இந்தியாவுக்கு வராதது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவர் வரவில்லை என்றால், அவர் ஒரு பெரிய தவறு செய்கிறார் என்று அர்த்தம். இந்தியா ஒரு செழிப்பான பொருளாதாரத்தின் விளிம்பில் உள்ளது. நாம் இந்தியாவுடன் இருப்பதற்கான நல்ல காலம் இது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT