Last Updated : 02 Jun, 2025 06:18 PM

 

Published : 02 Jun 2025 06:18 PM
Last Updated : 02 Jun 2025 06:18 PM

இந்தியாவில் கார்களை தயாரிக்க ‘டெஸ்லா’ ஆர்வம் காட்டவில்லை: மத்திய அமைச்சர் குமாரசாமி

புதுடெல்லி: உலகின் முன்னணி மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.

இந்தியாவில் மின்சார கார்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை வெளியிடும் செய்தியாளர் கூட்டத்தில் இதுகுறித்து பேசிய ஹெச்.டி.குமாரசாமி, "டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தங்களது ஷோரூம்களைத் தொடங்குவதில் மட்டுமே அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்கள் இந்தியாவில் உற்பத்தியை தொடங்க ஆர்வமாக இல்லை. இதுவரை டெஸ்லா உற்பத்திய தொடங்க ஆர்வம் காட்டவில்லை.

இந்தியாவில் மின்சார கார்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்துக்கான முதல் சுற்று பங்குதாரர் விவாதங்களில் மட்டுமே டெஸ்லா பிரதிநிதி பங்கேற்றார். இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்று விவாதங்களில் டெஸ்லா நிறுவனத்தின் பிரதிநிதி பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் மெர்சிடிஸ் பென்ஸ், ஸ்கோடா-வோக்ஸ்வாகன், ஹூண்டாய் மற்றும் கியா போன்ற உலகளாவிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் மின்சார கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

'இந்தியாவில் மின்சார பயணிகள் கார்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம்' தொடர்பாக அரசுக்கும் தொழில் துறைக்கும் இடையிலான பங்குதாரர் விவாதங்களின் போது மெர்சிடிஸ் பென்ஸ், ஸ்கோடா-வோக்ஸ்வாகன், ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன, அதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் அமைச்சரால் வெளியிடப்பட்டன.

இந்தத் திட்டம் கடந்த ஆண்டு மார்ச் 15 அன்று அறிவிக்கப்பட்டாலும், அதன் வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்பட்டன. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இன்னும் சில வாரங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்றும், எந்தெந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் என்பது இன்னும் தெரியவில்லை என்றும் மத்திய கனரகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தின் விதிகளின்படி குறைந்தபட்சம் ரூ.4,150 கோடி முதலீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x