Last Updated : 01 Jun, 2025 10:27 PM

1  

Published : 01 Jun 2025 10:27 PM
Last Updated : 01 Jun 2025 10:27 PM

மின்கட்டணத்தை உயர்த்தினால் தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடப்படும்: அரசுக்கு தொழில் அமைப்பினர் கோரிக்கை

கோவை: ஏற்கெனவே உயர்த்தப்பட்ட மின்கட்டணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொழில் நிறுவனங்களுக்கு இவ்வாண்டு மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என, தமிழக அரசுக்கு தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது: “தற்போது அமலில் உள்ள மின்கட்டண உயர்வால் தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே நெருக்கடியில் உள்ளன. தவிர மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக உள்நாடு மற்றும் உலக சந்தையில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறையும் அதிகம் உள்ளது. அமெரிக்க அரசு மாற்றியமைத்துள்ள புதிய வரி விதிப்பு மற்றும் போர் சூழல் காரணமாக எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் தமிழக அரசு இவ்வாண்டு மின்கட்டணத்தை உயர்த்தினால் நிதி நெருக்கடி அதிகமாகும். இதனால் உற்பத்தி குறைந்து பலர் வேலை இழக்கும் நிலை ஏற்படும். பல நிறுவனங்கள் மூடப்படவும் வாய்ப்பு உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின்(ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறும் போது,“விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வரும் ஜவுளித்தொழில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் பல்வேறு காரணங்களால் நெருக்கடியில் உள்ளன. குறிப்பாக கழிவுபஞ்சு கொண்டு நூல் உற்பத்தி செய்யும் ஓபன் எண்ட் நூற்பாலைகளில் தமிழக அரசு ஏற்கெனவே அமல்படுத்தியுள்ள மின்கட்டண உயர்வால் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் இவ்வாண்டு தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டணத்தை உயர்த்த கூடாது. இல்லையெனில் பலர் வேலைவாய்ப்பு இழக்கும் நிலை ஏற்படும்” என்றார்.

தமிழ்நாடு சிறு தொழில்கள் சங்கத்தின் ‘டான்சியா’ துணை தலைவர் சுருளிவேல் மற்றும் ‘டாக்ட்’ கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது: “கடந்த 2022-ம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை ஏற்று மின்சார வாரியம் குறு, சிறு தொழில்முனைவோர் பயன்படுத்தும் மின்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது. குறிப்பாக நிலை கட்டணத்தை 2022-ம் ஆண்டு 430 சதவீதம் உயர்த்தியது. இதனால் உற்பத்தி செலவில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்தி வருவதால் குறு, சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வாண்டு உயர்த்தப்பட உள்ள மின்கட்டண உயர்வை ரத்து செய்யவும், ஏற்கெனேவ உயர்த்தப்பட்ட நிலை கட்டணத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

‘காட்மா’ தலைவர் சிவக்குமார் கூறும் போது, “தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வால் தொழில்துறையினர் உள்நாட்டில் மற்ற மாநிலங்களுடன் கூட போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இவ்வாண்டு மின்கட்டணத்தை உயர்த்த கூடாது. ஏற்கெனவே உயர்த்தப்பட்டுள்ள நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x