Published : 04 May 2025 09:56 AM
Last Updated : 04 May 2025 09:56 AM
ரயில்வேக்கு புதிய டிஜிட்டல் கடிகாரம் வடிவமைப்புக்கான தேசிய அளவிலான போட்டியை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த வடிவமைப்புக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் ரயில்வே நிலையங்களில் நிறுவப்படவுள்ள டிஜிட்டல் கடிகாரங்களுக்கான வடிவமைப்பைத் தேர்வு செய்ய தேசிய அளவிலான போட்டியை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. படைப்பாற்றல் மிக்க நபர்களிடம் இருந்து வடிவமைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
இப்போட்டி தொழில்முறை நிபுணர்கள், கல்லூரி - பல்கலை., மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என 3 பிரிவுகளில் நடக்கும். பள்ளி பிரிவில் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். இந்த மாணவர்கள் பள்ளி அடையாள அட்டையை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். கல்லூரி பிரிவில், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலை., சேர்க்கை பெற்றிருக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். மற்றவர்கள் தொழில் முறை பிரிவில் வருவார்கள்.
இந்திய ரயில்வேயின் அனைத்து நிலையங்களிலும் பயன்படுத்தத் தேர்ந்தெடுக்கப்படும் வடிவமைப்புக்கான முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். கூடுதலாக, ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து சிறப்பு பரிசுகளாக தலா ரூ.50,000 வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்பவர்கள், தங்கள் வடிவமைப்புகளை மே 31-ம் தேதிக்குள் contest.pr@rb.railnet.gov.in என்ற இ.மெயில் முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து வடிவமைப்புகளும் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வடிவமைப்புக்கும், அதைப் பற்றிய சுருக்கமான விளக்கத்தை இணைக்க வேண்டும். ஒருவரே பல வடிவமைப்புகளை சமர்ப்பிக்கலாம். அனைத்தும் அசலானவையாக இருக்க வேண்டும். பதிப்புரிமை மீறல்களை கொண்டிருக்கக் கூடாது. இத்தகவலை, ரயில்வே வாரியத்தின் (தகவல் மற்றும் விளம்பரத் துறை) செயல் இயக்குநர் திலீப் குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT