Published : 02 May 2025 07:51 PM
Last Updated : 02 May 2025 07:51 PM
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தால், பாகிஸ்தான் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. அந்நாட்டின் முக்கிய பங்குக்குறியீடான ‘கேஎஸ்இ - 100’ ஏப்ரல் 22 முதல் 30-ம் தேதி வரை மட்டும் 8,000 புள்ளிகள் (6%) சரிவடைந்துள்ளது.
ரத்தக்களரி ஆன ஏப்.30: ஏப்ரல் மாத இறுதி பாகிஸ்தான் சந்தை வர்த்தகமானது ரத்தக்களரியாக நிறைவடைந்தது. ஏப்ரல் 30 அன்று கேஎஸ்இ - 100 ஒரேநாளில் 3,545 புள்ளிகள் (3.09 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 111,326.57 ஆக இருந்தது. பல ஹெவி வெயிட் நிறுவனப் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்திருந்தன. குறிப்பாக, நான்கு முக்கிய நிறுவனங்களின் பங்குகள் மட்டும் மொத்தமாக 1,132 புள்ளிகள் சரிந்திருந்தன.
ஆறுதல் அளித்த மே 2: பல நாள் இடைவிடாத சரிவுக்கு பின்பு, மே 2-ம் தேதி பாகிஸ்தான் பங்குச் சந்தை சற்றே ஆறுதல் அளித்து சிறிய ஏற்றத்தில் இருந்தது. 2,179.80 புள்ளிகள் (1.96 சதவீதம்) உயர்ந்து 113,506.38 ஆக நிறைவடைந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் தணியாமல் தொடர்ந்தால் வீழ்ச்சி தொடரலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பஹல்காம் தாக்குதல்: ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பின்பு பாகிஸ்தானின் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. தாக்குதலுக்கான பதிலடியாக இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதே முக்கியக் காரணம். சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூரகத்தில் உள்ள அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் வெளியேற்றம், அட்டாரி எல்லை சோதனைச் சாவடி மூடல் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்திய அரசு.
அதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் சிம்லா நதிநீர் ஒப்பந்தம், ரத்து, பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்கத் தடை, வர்த்தக ஒப்பந்தம் நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இவை இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT