Published : 28 Apr 2025 06:28 PM
Last Updated : 28 Apr 2025 06:28 PM

‘மைக்ரோ ஃபைனான்ஸ் அடாவடி இனி இருக்காது’ - தமிழக அரசின் மசோதா மீது நம்பிக்கை 

சென்னை: கடனை வசூலிக்க நெருக்கடி கொடுத்தால் தண்டனை வழங்கும் வகையில், தமிழக சட்டமன்றத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மசோதா ஒன்றை கடந்த 26ம் தேதி தாக்கல் செய்துள்ளார். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச்சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் ராஜபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றுக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடன் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த சட்டத்திருத்தத்தின்படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்துக்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறை தீர்ப்பாயர் நியமிக்கப்பட வேண்டும்.

கடன் வழங்கிய நிறுவனம், கடன் பெற்றவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது என்றும், கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்காட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்கின்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது வரவேற்புக்குரியது.

கிராமப்புறங்களில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், மகளிரை குறி வைத்து கடன் வழங்கிவிட்டு, அதனை வசூலிப்பதற்காக கடுமையான மிரட்டல் போக்கை கையாண்டு வருவதால் பெண்கள் பலரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதும், விரக்தி நிலைக்கு தள்ளப்படுவதும் அதிகரித்து வந்ததை சுட்டிக்காட்டி,

தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச்சங்கம், கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பல்வேறு வடிவ போராட்டங்களை செய்தும், அவ்வப்பொழுது கூட்டத்தின் மூலமான கோரிக்கைகளை தொடர்ந்து முன் வைத்தும் வந்த நிலையில், நடந்து வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில், இந்த சட்டத்திருத்த மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். இது வரவேற்கத்தக்கது.

இதற்காக தமிழக அரசுக்கு, தமிழக கிராமப்புற மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையானது தேவையற்ற கடன்களை தவிர்ப்பதற்கும், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் அடாவடி போக்கை கட்டுப்படுத்தவும் வாய்ப்பாக அமையும்,” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x