Published : 22 Apr 2025 06:34 AM
Last Updated : 22 Apr 2025 06:34 AM

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்: அட்சய திருதியைக்கு நகை வாங்க திட்டமிட்டிருந்தோர் அதிர்ச்சி

தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.72,120-க்கு விற்பனையானது. இதனால், அட்சய திருதியைக்கு நகை வாங்க திட்டமிட்டிருந்தோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்பு நடவடிக்கை எதிரொலியாக உலக அளவில் தங்கம் விலை தினமும் அதிகரித்து வருகிறது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் விலை கடந்த பிப்ரவரி 11-ம் தேதி முதல்முறையாக ரூ.8 ஆயிரத்தை கடந்தது. அன்று ஒரு கிராம் விலை ரூ.8,060, ஒரு பவுன் விலை ரூ.64,480 ஆக இருந்தது. மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 31-ம் தேதி ஒரு பவுன் ரூ.67,600-க்கு விற்பனையானது.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பதும், சற்று குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,520, கடந்த 17-ம் தேதி ஒரு பவுன் ரூ.71,360, கடந்த 18-ம் தேதி ரூ.71,560 என தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சங்களை தொட்டது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வந்தது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 22 காரட் தங்கம் நேற்று ஒரு கிராமுக்கு ரூ.70 என பவுனுக்கு ரூ.560 அதிகரித்தது. இதனால், நேற்று ஒரு கிராம் ரூ.9,015-க்கும், ஒரு பவுன் ரூ.72,120-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,834, ஒரு பவுன் ரூ.78,672 ஆக இருந்தது.

இதுகுறித்து சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது:

அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கிய வர்த்தக போர் தற்போது சீனாவுக்கு எதிராக தீவிரமடைந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை பாதுகாக்கும் நோக்கில் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்கின்றனர். மேலும், பங்குச் சந்தை, அரசு பத்திரங்கள், கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட மற்ற முதலீடுகளில் நிலையற்ற தன்மை காணப்படுவதாலும், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.

இத்தகைய காரணங்களால், தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. ஏப்ரல் 21-ம் தேதி (நேற்று) 24 காரட் தங்கம் ஒரு கிலோ ரூ.1 கோடியை எட்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

வரும் நாட்களில் தங்கம் விலை சற்று குறைந்தாலும், மீண்டும் அதிகரிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.90 ஆயிரம் வரை அதிகரிக்கும். அடுத்த ஆண்டு ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையாகவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வரும் 30-ம் தேதி அட்சய திருதியை என்பதால், பலரும் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.110-ல் இருந்து ரூ.1 அதிகரித்து ரூ.111-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.1,11,000 ஆக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x