Published : 17 Apr 2025 10:35 PM
Last Updated : 17 Apr 2025 10:35 PM
கோவை: கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கழிவு பஞ்சு தரம் 50 சதவீதம் குறைந்து காணப்படுகிறது. இதனால் ஓபன் எண்ட் நூற்பாலைகளில் தூய பருத்தி கட்டாயம் கலக்க வேண்டியுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்பின்னிங் நூற்பாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு பஞ்சு முக்கிய மூலப்பொருளாக ஓபன் எண்ட் நூற்பாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் 600-க்கும் மேற்பட்ட ஓஇ நூற்பாலைகள் உள்ளன.
இத்தகைய நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் நூலை கொண்டு ஜூன்ஸ், திரைசீலைகள், கிட்சன் மேட் அப்ஸ் துணி வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஜவுளிப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஸ்பின்னிங் நூற்பாலைகளில் இருந்து பெறப்படும் கழிவு பஞ்சின் தரம் மற்றும் திடத்தன்மை மிகவும் மோசமாக உள்ளதால் கழிவு பஞ்சுடன் துய முதல் தர பஞ்சு கட்டாயம் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளி தொழில்கள் கூட்டமைப்பின்(ஆர்டிஎப்) தலைவர் எம்.ஜெயபால் கூறியதாவது: ஸ்பின்னிங் நூற்பாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசுபாடு தடுப்பதில் ஓபன் எண்ட்(ஓஇ) நூற்பாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மண்ணின் தன்மை உரம் பயன்பாடு காரணமாக நிலத்தின் வளம் மோசமடைந்து வருவதால் தொடர்ந்து பஞ்சின் தரம் குறைந்து வருகிறது. அவற்றை ஸ்பின்னிங் நூற்பாலைகளில் அதிநவீன இயந்திரங்களில் பயன்படுத்தும் போது அதன் திடத்தன்மை மேலும் குறைந்து கழிவு பஞ்சு வெளியேற்றப்படுகிறது.
இதனால் அவற்றை பெற்று ஓபன் எண்ட் நூற்பாலைகளில் உள்ள நூற்பு இயந்திரங்களில் நேரடியாக பயன்படுத்த முடிவதில்லை. எனவே கழிவு பஞ்சுடன், தூய பஞ்சு குறிப்பிடத்தக்க அளவு கட்டாயம் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கழிவு பஞ்சின் தரம் தற்போது 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால் ஓஇ நூற்பாலைகளில் உற்பத்தி செலவு 15% அதிகரித்துள்ளது.
விசைத்தறி போராட்டத்திற்கு முன் 20-ஸ் வார்ப்பு நூல் ஒரு கிலோ ரூ.155-ஆகவும். 20 வெப்ட் நூல் ரூ.145-க்கும் விற்பனை செய்யப்பட்டன. அதே போல் கோம்பர் நாயில்(கழிவு பஞ்சு ரகம்) ரூ.100 முதல் ரூ.102. எப்.எஸ் (கழிவு பஞ்சு ரகம்) ரூ.83 முதல் ரூ.85 வரை இருந்தது. விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் நூல் விலை ஒரு கிலோவிற்கு ரூ.10 முதல் ரூ.15 வரை குறைந்துள்ளது. மறுபுறம் ஸ்பின்னிங் மில்களில் இருந்து கொள்முதல் செய்யும் கழிவு பஞ்சின் விலை இந்த மாதம் ஒரு கிலோ ரூ.4 வரை அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்தால் ஏற்கனவே நெருக்கடியை சந்தித்து வரும் வேளையில் கழிவு பஞ்சின் விலை உயர்வு ஓபன் எண்ட் நூற்பாலைத்துறையினருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
மறுசுழற்சி ஜவுளி பொருட்களான காடா விலை கடந்த மூன்று ஆண்டு காலமாக விலை உயரவில்லை. அதே வேளையில் மின்கட்டணம் 36 சதவீதம் உயர்ந்தும் உதிரிபாகங்கள் பேக்கிங் மெட்டீரியல் சீஸ் டியூப் அனைத்தும் 20 முதல் 57 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
எங்கள் நூலை கொண்டு தயாரிக்கும் ஜவுளி பொருட்கள் உயராமல் கழிவு பஞ்சின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கட்டுபடியாகாமல் 60 மேற்பட்ட ஓஇ நூற்பாலை தொழில்துறையினர் விற்பனை மற்றும் வேறு ரக உற்பத்திக்கு சென்று விட்டனர்.
கைத்தறி மற்றும் விசைதறி நெசவாளர்களுக்கு நூலை வழங்கும் ஓ.இ மில்களுக்கு ஆண்டு முழுவதும் சீரான விலையில் மூலப்பொருள் கிடைத்தால் மட்டுமே சங்கிலி தொடரில் உள்ள அனைவருக்கும் வேலை வாய்ப்பையும் பொருளாதார இழப்பையும் வாழ்வாதாரத்தையும் மீட்க இயலும்.
கூரையின் மீது அமைக்கப்பட்ட சோலார் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை அமல்படுத்த மின்சார வாரியத்துக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT