Published : 16 Apr 2025 10:38 PM
Last Updated : 16 Apr 2025 10:38 PM
சேலம்: சிறு கனிம நில வரி விதிப்பை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணிகள் பாதிப்பதுடன், அரசுக்கு நாளொன்றுக்கு பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் குவாரி மற்றும் கிரஷர்கள் 150-க்கும் மேற்பட்டவை மூடப்பட்டு, சுமார் 1 லட்சம் டன் கனிம உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போராட்டம் குறித்து, சேலம் மாவட்ட குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கோபால் கூறியதாவது
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் நிலங்களில் வெட்டியெடுக்கப்படும் கனிமங்களுக்கு, கனமீட்டருக்கு ரூ.56 ஆக இருந்த ராயல்டியை, கடந்த 2024-ம் ஆண்டில் ரூ.90 ஆக தமிழக அரசு உயர்த்தியது. இந்த சூழலில், கடந்த ஏப்ரல் முதல் சிறு கனிம நில வரி என்று புதிய வரியை தமிழக அரசு விதித்துள்ளது. அத்துடன், வெட்டியெடுக்கும் கனிமங்களுக்கு கனமீட்டர் என்ற அளவில் விதிக்கப்பட்ட ராயல்டியை, தற்போது டன் என்ற அளவுகோலுக்கு மாற்றிவிட்டது. இதனால், ரூ.90 ஆக இருந்த ராயல்டியை தற்போது ரூ.165 ஆக செலுத்த வேண்டியதாகிறது.
இதுபோன்ற காரணங்களால், ரூ.850 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் எம்-சாண்ட் விலை ரூ.350 வரை உயர்ந்துவிட்டது. இதேபோல், பி-சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலையும் டன்னுக்கு ரூ.350 வரை உயர்ந்துவிட்டது. குறிப்பாக, எம்-சாண்ட், ஜல்லி என அனைத்தின் விலையும் 83 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது. இதனால், பொதுமக்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், தனியார் கட்டுமான நிறுவனத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, புதியதாக விதிக்கப்பட்டுள்ள சிறு கனிம நில வரி விதிப்பை கைவிட வேண்டும், வெட்டியெடுக்கப்படும் கனிமங்களுக்கு டன் அடிப்படையில் ராயல்டி வசூலிப்பது கைவிட்டு, மீண்டும் கனமீட்டர் அடிப்படையில் வசூலிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட குவாரி, கிரஷர்கள் மூடப்பட்டு, காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணிகள், அரசின் ஒப்பந்தப் பணிகள் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன. அரசுக்கு பலகோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொழிலைச் சார்ந்த பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மக்கள் நலன் கருதி அரசு எங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT