Last Updated : 15 Apr, 2025 04:08 PM

 

Published : 15 Apr 2025 04:08 PM
Last Updated : 15 Apr 2025 04:08 PM

சபரிமலை சந்நிதானத்தில் முதல் 2 நாளில் 100 தங்க டாலர்கள் விற்பனை!

தேனி: சபரிமலை சந்நிதானத்தில் ஐயப்பன் உருவத்துடன் கூடிய தங்க டாலர் விற்பனை நேற்று (ஏப்.14) தொடங்கியது. முதல் இரண்டு நாளில் 100 பக்தர்கள் இதனை பெற்றுள்ளனர் என்று தேவசம் போர்டு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்திருந்தது. இதன்படி சபரிமலையில் நேற்று விஷூ பண்டிகை தினத்தை முன்னிட்டு விற்பனை தொடங்கியது. சந்நிதானம் முன்புள்ள கொடிமரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவசம், கூட்டுறவு மற்றும் துறைமுக அமைச்சர் வி.என்.வாசவன் கலந்துகொண்டு விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

சபரிமலையில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்கடாலர் விற்பனையைத் தொடங்கி வைத்த தேவசம் போர்டு அமைச்சர் வி.என்.வாசவன். அருகில் தந்திரி கண்டரரு ராஜீவரு, தேவசம்போர்டு தலைவர் பிஎஸ்.பிரசாந்த், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி உள்ளிட்டோர்.

முதல் டாலரை ஆந்திராவைச் சேர்ந்த மணிரத்னம் என்ற பக்தர் பெற்றுக் கொண்டார். தந்திரி கண்டரரு ராஜீவரு, தேவசம்போர்டு தலைவர் பிஎஸ்.பிரசாந்த், உறுப்பினர் ஏ.அஜிகுமார், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தேவசம்போர்டு அதிகாரிகள் கூறுகையில், ''இந்த டாலரின் தரம் உறுதி செய்யப்பட்டு 916 முத்திரையுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு டாலருமே சந்நிதானத்தில் பூஜை செய்த பிறகே விற்பனை செய்யப்படுகின்றன. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களின் வரிசைப்படி தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 2 கிராம் டாலரின் விலை ரூ.19,300, நான்கு கிராம் டாலர் ரூ.38,600, 8 கிராம் டாலர் ரூ.77,200 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. www.sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இவற்றைப் பெறலாம். முதல் இரண்டு நாளில் 100 பக்தர்களுக்கு இந்த டாலர் விற்பனை செய்யப்பட்டுள்ளது'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x