Published : 13 Apr 2025 09:03 AM
Last Updated : 13 Apr 2025 09:03 AM
சென்னை மாவட்டத்தில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான நடைச்சீட்டு (E-Permit) உரிமம் பெற ஏப்.28ம் தேதி முதல் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் இடங்களில் அடித்தளம் அமைக்கும் பணியில் கிடைக்கப்பெறும் சாதாரண மண் மற்றும் சக்கை கல் ஆகிய கனிமங்களை அப்புறப்படுத்த உரிமம் வழங்கப்படுகிறது. அவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள கட்டுமான நிறுவனங்களின் இடங்களில் இருந்து கனிமங்களை அப்புறப்படுத்துவதற்கு அரசுக்கு உரிய கட்டணங்கள் செலுத்தி வாகனங்களில் ஏற்றிச் செல்லும் கனிமங்களுக்கு உதவி இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை, சென்னை அலுவலகத்தின் மூலமாக அச்சு வழித்தடச் சீட்டு பெற வேண்டும்.
இதற்காக, ஏப்.28ம் தேதி முதல் ‘mimas.tn.gov.in’ என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய சீட்டுகள் பெற்று கனிமங்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்வதும் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக கனிமங்களை எடுத்துச் செல்வதை தடுக்கவும் கண்காணிக்கவும் அரசுக்கு வருவாய் இழப்பை தடுக்கும் நோக்கிலும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலும், கனிமவளத் துறை அமைச்சரால், 2025-26ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் மாநிலம் முழுவதும் குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டு பரிசீலனை செய்து குத்தகை உரிமம் அனுமதி வழங்குவது தொடர்பாக படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் ஏப்.28ம் தேதி முதல் அரசு புறம்போக்கு மற்றும் தனி நபர் பட்டா நிலங்களில் உள்ள பல்வேறு வகையான கனிமங்களுக்கு குத்தகை உரிமம் அல்லது அனுமதி கோரும் விண்ணப்பங்கள் இணைய வழியாக மட்டுமே பெறப்பட்டு பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்பட உள்ளது.
எனவே, வருகின்ற 28ம் தேதி முதல் mimas.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே குத்தகை கோரும் மெட்ரோ ரயில் மற்றும் கட்டுமான நிறுவனங்கள், விண்ணப்பங்கள் மற்றும் சுரங்க நிலுவை தொகை சான்றிதழ் கோரும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், கனிம விதிகளுக்கு முரணாக அரசு அனுமதியின்றி எடுத்துச் செல்லப்படும் அனைத்து கனிமங்களும் மற்றும் அரசால் வழங்கப்படும் வழித்தடச் சான்றுகளில் விதிகளுக்கு முரணாக திருத்தங்கள் செய்தும், அனுமதி வழங்கப்படாத பகுதிகளிலிருந்து கனிமங்கள் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுத்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் வாகன உரிமையாளர், வாகன ஓட்டுநர் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது குற்றவியல், அபராத நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT