Published : 11 Apr 2025 12:43 PM
Last Updated : 11 Apr 2025 12:43 PM

அமெரிக்க - சீன வர்த்தகப் போர்: சரிவில் ஆசிய பங்குச் சந்தைகள்; இந்திய சந்தைகள் ஏற்றம்

புதுடெல்லி: சீனாவுடனான வர்த்தகப் போர் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா உட்பட 75 நாடுகளுக்கான கூடுதல் கட்டணங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடைநிறுத்தி வைத்திருக்கும் நிலையில் இன்று இந்திய பங்குச்சந்தையில் உயர்வுடன் தொடங்கின.

இன்றைய (வெள்ளிக்கிழமை) வர்த்தக தொடக்கத்தின் போது சென்செக்ஸ் 1061.26 புள்ளிகள் உயர்ந்து, 74,941.53 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 354.90 புள்ளிகள் உயர்ந்து 22,754.05 ஆக இருந்தது. உலகளாவிய சந்தைகளின் பதற்றம் சற்றே தணிந்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகளின் இந்த ஏற்றம் முதலீட்டாளர்களிம் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. மற்ற ஆசியப் பங்குச்சந்தைகள் சரிவில் உள்ள நிலையில், இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சரிவில் ஆசிய சந்தைகள்: முந்தைய நாளில் அமெரிக்க பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ஆசிய பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. ட்ரம்ப்பின் வர்த்தகப் போர் குறித்த கவலைகள் முதலில் ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு 5.6 சதவீதம் சரிவைச் சந்தித்தது.

காலை வர்த்தகத்தின் மத்தியில் டோகியோ 4.2 சதவீதம் வீழ்ச்சியடைந்து 33,148.45 ஆக இருந்தது. தென்கொரியாவின் கோஸ்பி 1.3 சதவீதம் சரிந்து, 2,413.16 ஆகவும், சீனாவின் ஹாங்காங்கின் ஹாங் செங்க் 0.4 சதவீதம் சரிந்து 20,606.04 ஆகவும், ஷங்காய் 0.2 சதவீதம் சரிந்து 3,218.94 ஆகவும் இருந்தன.

இந்திய பங்குச்சந்தைகளின் ஏற்றத்துக்கு காரணம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனா தவிர மற்ற நாடுகளுக்கு புதிய கட்டணங்களை 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக புதன்கிழமை அறிவித்தார். அதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.

அதிபர் ட்ரம்ப்பின் சீனாவுக்கான கட்டண விதிப்பு தற்போது 145 சதவீதத்தை எட்டியுள்ளது. இது பொருளாதார நிபுணர்கள் கணித்ததை விட அதிகம், இது சீனா- அமெரிக்க வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும். என்றாலும், சீனாவுக்கான அமெரிக்காவின் அதிக கட்டண விதிப்பு, அமெரிக்காவுக்கான இந்தியாவின் இறக்குமதியை அதிகரிக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

இதனிடையே கட்டண விகிதங்களால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்துக்கு ஆறுதலாக, இந்திய ரிசர்வ் வங்கி அதன் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீம் குறைத்திருந்தது. இதன்மூலம் ரெப்போ வட்டி வகிதம் 6 சதவீதமாக குறைந்தது. இது வீடு, வாகனம் கடன்வாங்கியவர்களுக்கு சற்று நிவாரணம் அளித்துள்ளது. இதுவும் இந்திய பங்குச்சந்தையின் ஏற்றத்தில் எதிரொலித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x