Published : 01 Apr 2025 10:43 PM
Last Updated : 01 Apr 2025 10:43 PM
சென்னை: சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் 2024-25ம் நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக சென்னை ஐ.சி.எஃப் (ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை) திகழ்கிறது. இந்த ஆலையில் வந்தே பாரத் பெட்டிகள், எல்.எச்.பி என்னும் நவீன பெட்டிகள், ஏசி மின்சார ரயில், மெமு ரயில் பெட்டிகள் உள்பட பல்வேறு வகைகளில் 70,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இங்கு தற்போது வந்தே பாரத் ரயில்கள், அம்ரித் பாரத் ரயில்கள், எல்எச்பி ரயில் பெட்டிகள், ஏசி மின்சார ரயில்கள் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த ஆலையில் கடந்த நிதியாண்டில் (2023-24ம் நிதியாண்டு) 2,829 பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு 3,000 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த ஆலையில் 2024-25-ம் நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து புதிய உற்பத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ஐ.சி.எஃப் அதிகாரிகள் கூறியதாவது: இந்திய ரயில்வேயின் முதன்மையான பயணிகள் பெட்டிகள் தயாரிப்பு ஆலையான ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலையில் முந்தைய உற்பத்தி சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. விநியோகிக்கப்பட்ட பவர் ரோலிங் ஸ்டாக் பெட்டிகளான 1,169 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் வந்தே பாரத் தூங்கும் வசதி பெட்டிகள்,வந்தே பாரத் சேர் கார், மின்சார, மெமு ரயில் பெட்டிகள் ஆகியவை அடங்கும். இதுதவிர, 1,838 எல்.எச்.பி பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
நமோ பாரத் ரேபிட் ரயில் தயாரிப்பு, 21 வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு, அம்ரித் பாரத் 2.0 ரயில்கள் தயாரிப்பு உள்ளிட்டவை கடந்த நிதியாண்டில் ஐ.சி.எஃப்-ன் முக்கிய சிறப்புகள் ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இச்சாதனை படைக்க உறுதுணையாக இருந்த ஐ.சி.எஃப் அதிகாரிகள், ஊழியர்களை ஐ.சி.எஃப் பொதுமேலாளர் யு.சுப்பாராவ் பாராட்டி இனிப்பு வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT