Published : 29 Mar 2025 06:22 PM
Last Updated : 29 Mar 2025 06:22 PM

‘புதிய விதிமுறைகளால் நகைக் கடன் பெற முடியாமல் மக்கள் அவதி’

சென்னை: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பால் ஏழை, நடுத்தர மக்கள் நகைக் கடன் பெறவோ, மறு அடமானம் வைக்கவோ முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர் என்று கூறியுள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்தப் புதிய அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.குணசேகரன், சங்கப் பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில், “இந்திய ரிசர்வ் வங்கி என்பது நாட்டின் கடைகோடியில் உள்ள ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாத அமைப்பு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. ரிசர்வ் வங்கி அண்மையில் அமல்படுத்திய புதிய கொள்கையால், விவசாயிகள், ஏழை, நடுத்தர மக்களுக்கு, அவசரத் தேவைக்கு நகை ஈட்டுக் கடன் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் புதிய அறிவிப்பின்படி, நகை அடமானம் வைத்து பெறப்பட்ட கடன் தொகையை வட்டியுடன் ஓராண்டு முடிவில் முழு தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த நகையை மறுஅடமானம் வைத்து கடனைப் புதுப்பிக்க முடியாது. ஏனெனில் வாங்கிய கடனுக்கான காலக்கெடு முடிந்தால், ஒரு நாள் கழித்துதான் இக்கடனை புதுப்பிக்க முடியும் என்று அறிவிப்பு வந்துள்ளது. ஓராண்டுக்குள் கடன் தொகையை வட்டியுடன் முழுமையாக செலுத்தியாக வேண்டும். இந்தக் காலக்கெடுவுக்குள் அடகு வைத்த நகையை மீட்க முடியாது போனால், அடுத்த நாளே அந்த நகையை ஏலம் விடுவதற்கான ஏற்பாட்டை வங்கிகள் தொடங்கிவிடும்.

இதுவரை பெற்ற நகைக் கடனை செலுத்த இயலாதவர்கள், அதே நகைக் கடனை புதுப்பித்து மறுகடன் பெற்று வந்தார்கள், புதிய அறிவிப்பின்படி இனி கடன் பெற முடியாது. விவசாயிகள், சிறு வியாபாரிகள், நடுத்தர மற்றும் சாமானிய மக்களுக்கு நகைக்கடன் மட்டுமே அவசரத் தேவைக்கு உதவியாக அமைகிறது. இப்பொழுது இது தடைசெய்யப்படுகிறது. எனவே, புதிய அறிப்பை மறுஆய்வு செய்து, பழைய நடைமுறையே தொடர அனுமதிக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x