Last Updated : 29 Mar, 2025 04:47 PM

 

Published : 29 Mar 2025 04:47 PM
Last Updated : 29 Mar 2025 04:47 PM

‘தமிழகத்தில் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது 5 மீன்பிடித் துறைமுகம், 32 மீன்பிடி இறங்கு தளங்கள்’

கோப்புப் படம்

சென்னை: ‘‘மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் 5 மீன்பிடித் துறைமுகம், 32 மீன்பிடி இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டு வரப்படுகிறது. விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும்’’ என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியது: மத்திய அரசின் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி போன்றவற்றுடன் கடந்த 2018-19ம் ஆண்டு தமிழக மீன்வளத் துறை சார்பில், சென்னை திருவொற்றியூர், நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத் துறை, வெள்ளப்பள்ளம், அக்கரைப்பேட்டை, விழுப்புரம் மாவட்டம் அழகங்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பரை குப்பம், கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் ஆகிய பகுதிகளில் ரூ.757 கோடி மதிப்பில் மீன்பிடி துறைமுகங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், சென்னை திருவொற்றியூரில் ரூ.200 கோடி மதிப்பில் மீன்பிடி துறைமுகம் கட்டப்படுகிறது. அதில், 200 படகுகளை நிறுத்தலாம். 2 ஆயிரம் பேர் நேரடியாகவும், 5 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர். இதேபோல், நாகை மாவட்டம், அக்கரைப் பேட்டையில் ரூ.81 கோடி மதிப்பில் நடைபெறும் துறைமுக விரிவாக்க பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இங்கு 400 படகுகள், 150 விசைப் படகுகள் நிறுத்தலாம். இதனால், 40 சதவீதம் மீன்பிடிப்பு அதிகரிக்கும். 8 ஆயிரம் பேர் நேரடியாகவும், 2 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.

நாகை மாவட்டம் ஆறுகாட்டுத் துறையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்துறைமுகம் மூலம் 10 ஆயிரம் பேர் நேரடியாகவும், 5 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர். நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் பகுதியில் ரூ.100 கோடி அமைக்கப்படும் துறைமுகப் பணி 78 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இதன் மூலம், 8 ஆயிரம் பேர் நேரடியாகவும், 5 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் ரூ.253 கோடி செலவில் மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இத்துறைமுகம் மூலம், 25 ஆயிரம் பேர் நேரடியாகவும், 5 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர். இதேபோல், 32 இடங்களில் ரூ.243 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்கு தளங்கங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x