Published : 27 Mar 2025 11:01 PM
Last Updated : 27 Mar 2025 11:01 PM
கோவை: புதிய ஒப்பந்தத்தில் விதிகளை திருத்தம் செய்து 2 ஆக்ஸில் லாரிகளை ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும், வாடகை நிர்ணயத்தில் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கேஸ் டேங்கர் லாரிகள் இன்று (மார்ச்.27) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்கத்தினர், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இடையேயான ஆலோசனைக் கூட்டம், கோவை அவிநாசி சாலை, லட்சுமி மில் அருகேயுள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் பேச்சுவார்த்தை இன்று (மார்ச்.27) நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை, இரவு 7.45 மணிக்கு நிறைவடைந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களுக்கு சாதகமான முடிவு வரும் வரை லாரிகள் ஓடாது. 3 நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. எனவே, கேஸ் டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது.
இதுதொடர்பாக 1,500 உறுப்பினர்களிடமும் ஆலோசித்து தான் மற்ற முடிவை எடுப்போம். பேச்சுவார்த்தையின் போது எங்கள் கோரிக்கைகளை, மேல் அதிகாரிகளிடம் பேசிவிட்டு சொல்கிறோம் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அபராதத் தொகை என்பது ஆரோக்கியமானதாக இருக்காது. இதனால் தொழிலை நடத்த முடியாது. எண்ணெய் நிறுவனங்கள் எதற்கும் ஒத்து வரவில்லை.
இந்த எல்.பி.ஜி லாரித் தொழிலை மிகவும் சிரமமான சூழலில் தான் நாங்கள் செய்து வருகிறோம். இந்த தொழிலால் முன்னேறிய நாங்கள், தற்போது இதே தொழிலால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். அழிவை நோக்கி செல்லும் தொழிலை காப்பாற்றவும், உறுப்பினர்களை காப்பாற்றவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் நாங்கள் வெற்றி பெறுவோம். வேலை நிறுத்ததால் அரசுக்கு வருவாய் இழப்பு தற்போது இல்லை. அதேசமயம், பொதுமக்களுக்கு எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு சிரமத்தை ஏற்படுத்தும். வாகனத்தை இயக்காவிட்டாலும், அதற்கான வரி கட்டணங்களை நாங்கள் செலுத்தியுள்ளோம். எனவே, இழப்பு என்பதை விட, மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பது தான் எங்கள் நோக்கமாகும். எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் நோக்கமும் இது தான்.
எனவே, எண்ணெய் நிறுவனத்தினர் இதற்கு ஒரு வழிமுறைகளை கண்டுபிடிப்பார்கள். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தென் மண்டலத்தில் மட்டும் 4 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எடை, தொலைவுக்கு ஏற்ப வாடகைக் கட்டணத் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது 3 நாட்களுக்கு கேஸ் இருப்பு உள்ளது. அதற்கு பிறகு தான் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, பொதுமக்களின் நலன் கருதி விதிமுறைகளை மாற்றிக் கொடுக்க வேண்டும். அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தரராஜன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள். படம்: ஜெ.மனோகரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT