Published : 26 Mar 2025 06:01 PM
Last Updated : 26 Mar 2025 06:01 PM
கிருஷ்ணகிரி: கோடை வெயில் வாட்டும் நிலையில் பந்தல் அமைக்க தென்னங்கீற்றுக்கு வரவேற்பு அதிகரிப்பால் விலை உயர்வு புத்துயிர் பெறும் தொழிலால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி எஸ்.கே.ரமேஷ் கிருஷ்ணகிரி கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், பந்தல் மற்றும் குடிசை, குடில் அமைக்க தென்னங்கீற்றுகள் தேவை அதிகரித்துள்ளது. இதனால், இத்தொழில் புத்துயிர் பெற்று வருவதால், போச்சம்பள்ளி பகுதி தென்னை சார்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள போச்சம்பள்ளி, சந்தூர், செல்லம்பட்டி, பேரூஅள்ளி, மருதேரி, அகரம், காவேரிப்பட்டணம், புலியூர், கோட்டப்பட்டி, மாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. தென்னையிலிருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய், கொப்பரை தேங்காய் உள்ளிட்டவை மூலம் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கிறது.
இதேபோல, தென்னை துடைப் பம், தென்னை ஓலைகளைச் சேகரித்து தென்னங்கீற்று விற்பனை என தென்னையைச் சார்ந்த உபதொழில் மூலம் மாவட்டம் முழுவதும் 2 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். குறிப்பாக போச்சம்பள்ளி பகுதியில் பல தொழிலாளர்கள் குடிசை தொழிலாகத் தென்னை துடைப்பம் மற்றும் தென்னங்கீற்றுகளை தயார் செய்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், வெப்பத்தைத் தணிக்க இயற்கை வழியான தென்னங்கீற்று பந்தல்கள், குடிசைகள், குடில்கள் அமைக்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தென்னங்கீற்று விற்பனை அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக நாகரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த துடைப்பம், தென்னங்கீற்று உற்பத்தியாளர்கள் கோவிந்தராஜ், செல்லம்பட்டி வெங்கடேசன் ஆகியோர் கூறியதாவது: போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்னை ஓலைகளைச் சேகரித்து கீற்று முடையும் தொழிலில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளோம்.
குறிப்பாக, பெண்கள், முதியவர்கள் அதிகளவில் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பச்சை ஓலையில் கீற்றும், காய்ந்த ஓலைகளில் இருந்து குச்சிகளை தனியாகச் சேகரித்தும் துடைப்பம் தயார் செய்து மண்டிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
தென்னங்கீற்றுகளைப் பொறுத்தவரைக் கோடை காலங்களில் தேவை அதிகரிக்கும். தற்போது, பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் மற்றும் நிழல் தரும் பந்தல்கள் அமைக்கத் தென்னங்கீற்றுகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடியாக இங்கே வந்து தென்னங்கீற்றுகளை கொள்முதல் செய்கின்றனர். கடந்தாண்டு ஒரு கட்டு (12 ஜோடி) தென்னங்கீற்று ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனையானது.
தற்போது, தேவை அதிகரிப்பால், ஒரு கட்டு ரூ.110 வரை விற்பனையாகிறது. தினசரி 200 லோடு தென்னங்கீற்றுகள் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர். கோடை, குளிர், மழை உள்ளிட்ட ஒவ்வொரு தட்பவெப்ப காலங்களிலும் இயற்கை முறையைப் பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கோடை வெயில் உக்கிரத்தைத் தணிக்க வீடுகளின் முன்பகுதி, திறந்தவெளி பகுதியில் தென்னங்கீற்று கொட்டகை அமைப்பது அதிகரித்து வருகிறது. இதனால், இத்தொழில் புத்துயிர் பெற்று வருவதால், இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT