Published : 26 Mar 2025 07:01 AM
Last Updated : 26 Mar 2025 07:01 AM
சென்னை: மகளிருக்கு நிதி ஆதாரம் மற்றும் நிதி சுதந்திரம் அளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள, மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, இத்திட்டத்தில் சேராத பெண்கள் உடனடியாக இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான நிதி ஆதாரம் மற்றும் அதிகாரமளிக்கும் வகையில், மத்திய அரசின் நிதி அமைச்சகத்தால் ‘மகளிர் மதிப்பு திட்டம்’ என்ற சிறுசேமிப்புத் திட்டம் கடந்த 2023 மார்ச் 31-ம் தேதி தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில், பெண் குழந்தை அல்லது தனிப்பட்ட பெண் நபரின் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தனிப்பட்ட முறையிலும், 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் உரிய பாதுகாவலர் மூலம் இந்த சேமிப்பு திட்டத்தைத் தொடங்கலாம்.
குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கணக்குத் தொடங்கிய நாளில் இருந்து 2 ஆண்டுகளில் இத்திட்டம் முதிர்வடையும்.
இதன்படி, இத்திட்டம் இம்மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில் இதுவரை சேராதவர்கள் உடனடியாக இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜி.நடராஜன் கூறியதாவது: மகளிருக்கு நிதி அதிகாரம் மற்றும் நிதி சுதந்திரம் அளிக்கும் வகையில், மத்திய அரசு தொடங்கி உள்ள மகளிர் மதிப்பு திட்டம் பெண்களுக்கு ஒரு சிறப்பான சேமிப்பு திட்டமாகும்.
இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக ஆண்டுக்கு 7.5 சதவீதம் வழங்கப்படும். கணக்குத் தொடங்கிய நாளில் இருந்து ஒராண்டு நிறைவடையும் போது 40 சதவீதம் வரை மீதித் தொகையில் திரும்ப பெற அனுமதிக்கப்படும்.
கணக்கு வைத்திருப்பவர்கள், பாதுகாவலர்கள் மரணம் அடைந்தாலோ அல்லது தீவிர மருத்துவ காரணங்களால் இந்தக் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.
கணக்குத் தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகு எந்த நேரத்திலும் கணக்கை முன்கூட்டியே முடித்துக் கொள்ளலாம். ஆனால், அவ்வாறு முடித்துக் கொள்ளும் பட்சத்தில் வட்டி விகிதம் 2 சதவீதம் குறைக்கப்படும்.
வரும் 31-ம் தேதியுடன் இத்திட்டம் முடிவடைய உள்ளதால், பெண்கள், பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் இந்த வாய்ப்பை அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு, https://www.indiapost.gov.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.
இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை சென்னை நகர மண்டல அஞ்சலத்துக்கு உட்பட்ட அஞ்சலகங்களில் 94,900 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.843 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நடராஜன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT