Published : 25 Mar 2025 07:12 PM
Last Updated : 25 Mar 2025 07:12 PM
புதுடெல்லி: புதிய வருமான வரி மசோதா வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மக்களவையில் நிதி மசோதா 2025 மீதான விவாதத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பதில் அளித்து பேசும் போது நிர்மலா சீதாராமன் கூறியாதவது: பிப்.13ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா தற்போது தேர்வுக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இக்குழு அடுத்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கு பின்பு அது (புதிய வருமான வரி மசோதா) மழைக்காலக் கூட்டத்தொடரின் போது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார். மழைக்காலக் கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரை நடைபெறும்.
எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதா, 1961ம் ஆண்டு வருமான வரி சட்டத்தின் அளவில் பாதியாக இருக்கிறது. மேலும் சட்டச் சிக்கல்கள் மற்றும் புதிய புதிய விளக்கங்களை குறைப்பதன் மூலம் வரி செலுத்துவற்கான உறுதிப்பாட்டை அடைய முயல்கிறது என்று முன்பு வருமானவரித்துறை இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தது.
புதிய வருமான வரி மசோதாவில் மொத்தம் 2.6 லட்சம் வார்த்தைகள் உள்ளன. இது தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் இருக்கும் 5.12 லட்சம் வார்த்தைகளை விட குறைவு அதேபோல், இதில் 536 பிரிவுகள் உள்ளன. ஏற்கனவே இருந்த வருமான வரிச்சட்டத்தில் 819 பிரிவுகள் இருக்கின்றன.
அதேபோல் அத்தியாங்களின் எண்ணிக்கையும் 47 -லிருந்து 23 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள வருமான வரி சட்டத்தில் 18 அட்டவணைகளே உள்ளன. அதனுடன் ஒப்பிடும் போது வருமானவரி சட்டம் 2025-ல் 57 அட்டவணைகள் உள்ளன. அதேநேரத்தில் 1,200 விதிகள் மற்றும் 900 விளக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT