Published : 22 Mar 2025 05:15 PM
Last Updated : 22 Mar 2025 05:15 PM
சென்னை: தமிழ்நாடு வணிக வரித் துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 318 போலிப் பட்டியல் வணிகர்கள் ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், போலி முத்திரைத்தாள் விற்பனை வணிகர்கள் இருவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாதாந்திர இணை ஆணையர்கள் அளவிளான ஆய்வுக் கூட்டங்களில் நியாயமாக வணிகம் செய்யும் வணிகர்களின் நலனை கருத்தில்கொண்டு, போலிப் பட்டியல் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள தொடர்ந்து அறிவுறுத்தியதின்பேரில், 14.03.2024 மற்றும் 02.07.2024 ஆகிய தேதிகளில் வணிக வரி ஆணையரின் உத்தரவின்படி முதல் மற்றும் இரண்டாவது மாநில அளவிலான தீடீர் செயலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து, மார்ச் 12-ம் தேதி அன்று மூன்றாம் முறையாக மாநிலம் முழுவதும் தமிழ்நாடு வணிக வரித் துறையின் நுண்ணறிவுப் பிரிவின் மூலம் சீரியமுறையில் திட்டமிடப்பட்ட திடீர் செயலாக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 318 போலிப் பட்டியல் வணிகர்கள், ரூபாய் 951.27 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது.
குறிப்பாக, திருவள்ளுர் மாவட்டத்தில் இயங்கிவரும் மெட்ரோ எண்டர்பிரைசஸ் என்ற வணிக நிறுவனத்தை நுண்ணறிவுப் பிரிவினர் ஆய்வு செய்து, ரூபாய் 12.46 கோடி அளவில் உள்ளீட்டு வரி போலியாக துய்த்து, அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தியதை கண்டறிந்து, அதன் உரிமையாளர் ஜெயபரகாஷ் மற்றும் பஷீர் அகமது ஆகியோரை நேற்று (மார்ச் 21) கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT