Published : 21 Mar 2025 07:56 PM
Last Updated : 21 Mar 2025 07:56 PM
சென்னை: பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையடுத்து, வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற இருந்த வங்கி ஊழியர் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுமக்களின் தாக்குதலில் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாதுகாக்க போதிய பாதுகாப்பு அளிக்க அனைத்து வங்கிக் கிளைகளிலும் ஆயுதம் தாங்கிய காவலர்களை பணி அமர்த்த வேண்டும். வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வங்கிகளில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும்.
ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகளுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். வங்கிகளில் அயல்பணி மூலம் வெளியாட்களை பணி நியமனம் செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் 48 மணி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், , இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட 9 சங்கங்கள் அறிவித்தன.
இந்நிலையில், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை இன்று (மார்ச் 21) நடைபெற்றது. இதில், இந்திய வங்கி சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் மத்திய நிதி துறை செயலாளர் பங்கேற்றனர்.
இப்பேச்சுவார்த்தையில், வங்கிகளில் காலி பணியிடங்கள் நிரப்புவது, வங்கிகளில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கோரிக்கைகள் குறித்து நேரடியாக கண்காணிப்பதாக தலைமை தொழிலாளர் ஆணையர் தெரிவித்தார்.
மேலும், இப்பேச்சுவார்த்தையை வரும் ஏப்ரல் மாதம் 3-வது வாரத்தில் மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. “இப்பேச்சுவார்த்தையில் சில சாதகமான முன்னேற்றங்கள் தெரிவதால், எங்களுடைய போராட்டத்தை ஓரிரு மாதத்துக்கு தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுளளது. எனவே, வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது” என அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT