Published : 16 Mar 2025 10:59 AM
Last Updated : 16 Mar 2025 10:59 AM
காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மணலூர் ஆகிய இடங்களில் ரூ 1,112 கோடி செலவில், புதிய மின்னணு உற்பத்தி பேட்டைகளை மத்திய அரசு அமைக்க உள்ளது என்று, மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பண்ணூரில் தனியார் மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
பின்னர், அவர் பேசியதாவது: பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் காரணமாக, மின்னணு உற்பத்தி துறையில் இந்தியா வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்தி வருகிறோம். இன்று உலகின் 2-வது ஏற்றுமதி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ரயில்வே துறையில், கடந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.6,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முன் எப்போதையும் விட அதிகம். இதில், புதிய ரயில் பாதைகள் அமைத்தல், பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைத்தல், ரயில் நிலையங்கள் மேம்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
மின்னணு தொழிலைப் பொறுத்தவரை, உற்பத்தியுடன், வடிவமைப்பு பொருளாதாரமும் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ரூ 1,112 கோடி செலவில், காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், மணலூர் ஆகிய இடங்களில் புதிய மின்னணு உற்பத்தி பேட்டைகளை மத்திய அரசு அமைக்க உள்ளது.
தமிழ் மிகவும் பழமையான, மிகவும் இனிய மொழி. அது, இந்தியாவின் சொத்தாக மட்டுமல்லாமல், உலகத்தின் சொத்தாகவும் திகழ்கிறது. இது நம் அனைவருக்கும் பெருமை. நாம் அனைத்து இந்திய மொழிகளையும் மதிக்கிறோம். அதில் பெருமை கொள்கிறோம். ஒவ்வொரு இந்திய மொழிக்கும் உரிய இடத்தைக் கொடுத்து, அவற்றுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பேசும்போது, ”தேசிய ஏற்றுமதியில் 36 சதவீதம் பங்கைக் கொண்டு இந்தியாவின் முன்னணி மின்னணு உற்பத்தியாளராக தமிழகம் முன்னணியில் உள்ளது. இந்தத் தொழிற்சாலை அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி, அதிக மதிப்புள்ள மின்னணு உற்பத்திக்கான உலகளாவிய மையமாக தமிழகத்தின் பங்கை வலுப்படுத்துகிறது” என்றார்.
மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், மாநில தொழில் துறை செயலர் அருண் ராய் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT