Published : 14 Mar 2025 05:15 PM
Last Updated : 14 Mar 2025 05:15 PM
ராமேசுவரம்: சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், ராமேசுவரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து ராமேசுவரத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 4 கோடி வரையிலும் ஆன்மிக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களில் விமானம் மூலம் வருபவர்கள் முதலில் மதுரை, தூத்துக்குடி, திருச்சி வரையிலும் வந்து, அங்கிருந்து நான்கு முதல் ஆறு மணி நேரம் வரையிலும் கார், பேருந்து அல்லது ரயில் மூலம் பயணம் செய்து ராமேசுவம் வரவேண்டியுள்ளது.
இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது. இது குறித்து ‘தி இந்து தமிழ்’ நாளிதழ் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உதான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தஞ்சை, வேலூர், நெய்வேலி ஆகிய நான்கு ஆகிய இடங்களில் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ராமநாதபுரம் விமான நிலையத்திற்கு ரூ. 36.72 கோடியும், தஞ்சை விமான நிலையம் அமைக்க ரூ.50.59 கோடியும், வேலூர் விமான நிலையத்தக்கு ரூ.44 கோடியும், நெய்வேலி விமான நிலையத்திற்கு ரூ.30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆன்மிக பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 50-லிருந்து 75 பேர் வரையிலும் பயணிக்கக்கூடிய சிறியரக விமானங்கள், 10 பேர் வரையிலும் பயணம் செல்லக்கூடிய ஹெலிகாப்டர்களுக்கான சிறிய விமானநிலையங்கள் மற்றும் ஹெலிபேட்களை தமிழகத்தின் பல்வேறு இடங்களை தமிழக அரசு கண்டறிந்தது. முதற்கட்டமாக தனுஷ்கோடி - ராமேசுவரம் நெடுஞ்சாலையில் நடராஜபுரம் அருகே 13.15 ஏக்கர் நிலம் தேர்வுசெய்யப்பட்டு ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைப்பதற்கான நிலமும் கையப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் இன்று தமிழக சட்டப்பேரவையில் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு விமான நிலையம் முக்கியம் என்பது நன்கு அறிந்த அரசு, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு ரூ.2,938 கோடி மதிப்பிலான நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. சேலம் விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. பரந்தூர் விமான நிலையப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தென் மாநிலங்களுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வரும் சூழலில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்” எனத் தெரிவித்தார். இந்த ராமேசுவரம் விமான நிலையம் அமைக்கப்பட்டால், ராமேசுவரத்துக்கு ஆன்மிக பயணம் மற்றும் சுற்றுலா செல்வோருக்கு மட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் வேலை செல்வோருக்கும் பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT