Published : 14 Mar 2025 04:54 PM
Last Updated : 14 Mar 2025 04:54 PM
சென்னை: நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 2,000 இணையம் சார்ந்த சேவைப் பணித் தொழிலாளர்களுக்கு புதிதாக இருசக்கர மின் வாகனம் (e-Scooter) வாங்கும் பொருட்டு தலா 20,000 ரூபாய் மானியமாக வழங்கும் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை தாக்கல் செய்தார். தொழிலாளர் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசுகையில், “வேகமாக வளர்ந்து வரும் இணையம் சார்ந்த பொருளாதாரச் சூழலில், இணையம் சார்ந்த சேவைப் பணிகளில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துவரும் நிலையில், இத்தொழிலாளர்களின் நலனுக்காக தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியம் (Gig Workers Welfare Board) உருவாக்கப்பட்டது.
இந்நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 2,000 இணையம் சார்ந்த சேவைப்பணித் தொழிலாளர்களுக்கு புதிதாக இருசக்கர மின் வாகனம் (e-Scooter) வாங்கும் பொருட்டு தலா 20,000 ரூபாய் மானியமாக வழங்கும் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும். தமிழகத்தில் உள்ள இணையம் சார்ந்த சேவைப்பணித் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில், சுமார் 15 லட்சம் தொழிலாளர்களுக்கு, விபத்து மரணம் மற்றும் இயலாமை இழப்பீட்டுக்கான குழு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
மேலும், இவ்வகை சேவைப்பணித் தொழிலாளர்களுக்கென அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வுக்கூடங்கள், சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உருவாக்கப்படும்.
இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 1975 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT