Published : 11 Mar 2025 09:22 PM
Last Updated : 11 Mar 2025 09:22 PM
புதுடெல்லி: பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் விருதுநகர் உள்பட 7 இடங்களில் ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று (மார்ச் 11) கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலின் விவரம்: “2021-22 முதல் 2027-28 வரை 4,445 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன், தமிழ்நாடு (விருதுநகர்), தெலங்கானா (வாரங்கல்), குஜராத் (நவ்சாரி), கர்நாடகா (கலபுராகி), மத்தியப் பிரதேசம் (தார்), உத்தரப் பிரதேசம் (லக்னோ), மகாராஷ்டிரா (அமராவதி) ஆகிய 7 இடங்களில் ‘பிஎம் மித்ரா’ ஜவுளி பூங்காக்களை அமைப்பதற்காக அரசு இறுதி செய்துள்ளது.
ஜவுளித் தொழிலின் ஒட்டுமொத்த மதிப்புச் சங்கிலிக்கான ஒருங்கிணைந்த பெரிய அளவிலான மற்றும் நவீன தொழில்துறை உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் நோக்கத்துடன், கிரீன்ஃபீல்ட், பிரவுன்ஃபீல்ட் தளங்களில் 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதி மற்றும் ஆயத்த ஆடை பூங்காக்களை அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நூற்பு, நெசவு, பதப்படுத்துதல் மற்றும் அச்சிடுதல் முதல் ஆடை உற்பத்தி வரை பண்ணை முதல் இழை வரை, இழை முதல் தொழிற்சாலை, தொழிற்சாலை முதல் வடிவமைப்பு (ஃபேஷன்) வரை, வடிவமைப்பு முதல் வெளிநாடு வரை என்ற 5 அம்சப் பார்வையுடன் ஒருங்கிணைந்த ஜவுளி மதிப்புக் கூட்டல் சங்கிலியை உருவாக்கும் வாய்ப்பை இத்திட்டம் வழங்கும்.
ஒவ்வொரு பிஎம் மித்ரா பூங்காவும் நூற்பு, நெசவு, பதப்படுத்துதல், அச்சிடுதல், ஆடை மற்றும் பாகங்கள் உற்பத்தி உட்பட ஜவுளி மதிப்பு சங்கிலியின் அனைத்து கூறுகளிலும் 3 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT