Published : 11 Mar 2025 04:52 PM
Last Updated : 11 Mar 2025 04:52 PM
சென்னை: “மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மின்கட்டண விகிதத்தை தமிழக மின்வாரியம் மாற்றித் தரவில்லை” என தொழில் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் குடிசை தொழில், குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ‘3ஏ1’ பிரிவில் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ4.80-ம், அதற்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.95-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதனுடன் சேர்த்து கிலோ வாட்டுக்கு மாதம் ரூ.75 நிரந்தர கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ‘3பி’ பிரிவில் தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனுடன் சேர்த்து 50 கிலோ வாட் வரை உள்ள இணைப்புகளுக்கு கிலோ வாட்டுக்கு ரூ.81-ம், 50 முதல் 112 கிலோவாட் வரை ரூ.160-ம், அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ வாட்டுக்கும் ரூ.589 நிரந்தர கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கடந்த 2022 செப்டம்பரில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டபோது, தொழிற்சாலைகளுக்கான நிலைக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டன. இதை குறைக்கக் கோரி குறுந்தொழில் நிறுவனங்கள் போராட்டங்களில் ஈடுபட்டன. இதையடுத்து, 12 கிலோவாட் வரை மின் இணைப்பு பெற்றுள்ள தொழில்களுக்கு ‘3பி’ கட்டண விகிதத்தில் இருந்து ‘3ஏ1’ பிரிவுக்கு மாற்ற 2023 நவம்பரில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. இதுவரை பல நிறுவனங்களுக்கு விகிதம் மாற்றப்படவில்லை.
இதுகுறித்து, தொழில் துறையினர் கூறுகையில், “மின் கட்டண விகிதம் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால் மாற்றி தருவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், விண்ணப்பித்தாலும் மாற்றித் தருவதில்லை. ஒவ்வொரு தொழிற்சாலையும் எந்தக் கட்டண விகிதத்தில் உள்ள என்ற விவரம் மின்வாரியத்திடம் உள்ளது. எனவே, மின்வாரியம் 12 கிலோவாட்டுக்கு குறைவாக உள்ள நிறுவனங்களின் மின்கட்டண விகிதத்தை மாற்ற வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT