Published : 11 Mar 2025 10:09 AM
Last Updated : 11 Mar 2025 10:09 AM
மும்பை: இந்திய பங்குச் சந்தை இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தக நேர துவக்கத்தின்போது கடும் சரிவை எதிர்கொண்டது.
அதன்படி இன்று (மார்ச் 11) காலை வர்த்தக நேர துவகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் சரிந்தது. அதேபோல், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 100 புள்ளிகளுக்கு மேல் இறங்கியது. குறிப்பாக ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி கண்டுள்ளன.
காரணம் என்ன? பொருளாதார மந்தநிலை மற்றும் வர்த்தக பதற்றங்கள் குறித்த அச்சங்களால் உலகளாவிய குறிப்பாக அமெரிக்க பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, இந்தியப் பங்குகளிலும் பிரதிபலித்துள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய ஐடி நிறுவனப் பங்குகளும் அதளபாதாள சரிவைக் கண்டதால் நிலைமை மோசமடைந்துள்ளது. இதுவே இந்தியப் பங்குச் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2022-க்குப் பிறகு...முன்னதாக நேற்று (மார்ச் 10), அமெரிக்க பங்குச் சந்தைகள் கடந்த 2022-க்குப் பிறகு மிகப்பெரிய ஒற்றை நாள் சரிவைக் கண்டன. அமெரிக்க பங்குச் சந்தைக் குறியீடுகளான எஸ் அண்ட் பி 500, நாஸ்டாக் (Nasdaq) 4% வரை சரிந்தன, டவ் ஜோன்ஸ் 2.08% சரிந்தது. இவை உலகளவில் சந்தைகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
பங்கு வர்த்தகம் தொடங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலையில் நழுவ முடியுமா? என்பது குறித்து கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்த்திருந்தார். அதன் நீட்சியாகவே அமெரிக்கப் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் வரி விதிப்புகள் முதலீட்டாளர்கள், வணிகர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். அதனால் பங்குச் சந்தைகளில் ஊசலாட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT