Published : 10 Mar 2025 04:46 PM
Last Updated : 10 Mar 2025 04:46 PM
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.612 கோடிக்கு புதுச்சேரி நகரில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில், ரூ.99 கோடி 63 லட்சத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
ஒரே இடத்தில் இருந்து பொதுமக்களுக்கு தேவையான பன்முக சேவைகளை வழங்கிடும் வகையில் இத்திட்டம் வரையறுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் போக்குவரத்து சீரமைப்பு, போக்குவரத்து விதிமீறலை கண்காணித்தல், நகரப்பகுதியில் காற்றின் தரத்தை அறிதல், வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை, சுற்றுலா பயணிகளுக்கான பிரத்யேக செயலி, குடிமக்களுக்கான பிரத்யேக செயலி, நகரம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், 11 இடங்களில் 3.8 மீட்டர் அகலமும், 1.9 மீட்டர் நீளமும் கொண்ட மின்னணு டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் அரசின் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். அதே சமயம், மின்னணு திரைகளை தனியார் விளம்பரங்களுக்கு பயன்படுத்தி அரசும் வருவாய் ஈட்ட முடியும்.
புதுச்சேரியில் இணையதள சேவைக்கான 91 கி.மீ தூரத்துக்கு அதிநவீன ஆப்டிக் பைர் கேபிள் பதிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 36 கி.மீ தூரத்துக்கு பூமிக்கு அடியிலும், 55 கி.மீ தூரத்துக்கு பூமிக்கு மேலும் இந்த கேபிள் பதிக்கப்படவுள்ளது. இதுவரை 30 கி.மீ தூரத்துக்கு ஒளியிழை கேபிள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி நகரம் முழுவதும் 420 சிசிடிவி கேமரா அமைக்கப்படவுள்ள நிலையில், இதுவரை 300-க்கும் மேற்பட்ட கேமராக்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு, 22 சந்திப்புகளில் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை திட்டத்துக்காக 65 கம்பங்கள் அமைக்கப்பட்டு, கேமரா பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
இவற்றின் மூலம் பெறப்படும் தகவல்களை கொண்டு, போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியும். இருசக்கர வாகனத்தில் அதிக வேகமாக செல்வது, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்வது உட்பட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவர்களை கண்காணித்து அவர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை இந்த தொழில்நுட்பங்கள் உதவி செய்யும்.
மேலும் முக்கிய வடிநீர் வாய்க்கால்களில், 20 இடங்களில் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கைக்கான சென்சார் கருவியும் அமைக்கப்பட உள்ளது. இதுவரை 16 இடங்களில் இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. வாய்க்காலில் செல்லும் தண்ணீரின் அளவை கண்காணித்து இது தகவல் அனுப்பும். இதன்மூலம் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்பு, மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுத்து, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வழி காணப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் கூறும்போது, ‘‘இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஒருங்கிணைக்கும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் லாஸ்பேட்டை இசிஆர் சாலையில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டுப்பாட்டு மையத்தில் அனைத்து பணிகளும் முடிந்து தயார் நிலையில் உள்ளது.
இங்கு அனைத்து சிசிடிவி கேமராக்களையும் கண்காணிக்க டிஜிட்டல் திரை மற்றும் 24 கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தில் காவல்துறை, போக்குவரத்து மற்றும் பிற துறை அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். தற்போது முதற்கட்ட பணிகள் முடிந்து, விரைவில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு பணிகள் பயன்பாட்டுக்கு வருகிறது.
பொதுமக்களுக்கு உதவும் வகையில் 12 இடங்களில் ‘ஸ்மார்ட்’ கம்பங்கள் அமைக்க இருக்கிறோம். அதில் எல்டிஇ தெருவிளக்கு, சிறிய டிஜிட்டல் திரை, வை- பை வசதி, கேமரா, பொதுமக்களுக்கான அறிவிப்பு ஒலிபெருக்கி, அவசர அழைப்பு பெட்டி உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். இந்த ‘ஸ்மார்ட்’ கம்பத்தில் அவசர அழைப்பு பெட்டி ஒன்று இருக்கும்.
அதில் உள்ள பொத்தானை ஒருவர் அழுத்தியவுடன் சுற்றியுள்ள பகுதி கேமரா மூலம் படம் எடுக்கப்பட்டு, கட்டுப்பாட்டு மையத்துக்கு உடனே தகவல் அனுப்பி விடும். உதவி தேவைப்படும் நபரும் தங்களது கருத்தை பதிவு செய்து அனுப்பி வைக்க முடியும். இதுதவிர பொதுமக்கள் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகளையும் ஒலி பெருக்கி மூலம் வெளியிட முடியும்.
குடிமக்களுக்கான பிரத்யேக செயலி மூலம் குடிநீர் கட்டணம், மின் கட்டணம், வீடு மற்றும் சொத்து வரி, பாதாளச் சாக்கடை வரி உட்பட அனைத்து வரிகள் மற்றும் கட்டணங்களை எளிதாக செலுத்த முடியும். சுற்றுலா பயணிகளுக்கான செயலியில் புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்கள், புதுச்சேரியின் சிறப்புகள், ஓட்டல்கள், சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்” என்று தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT