Published : 08 Mar 2025 04:51 AM
Last Updated : 08 Mar 2025 04:51 AM
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 3.0, ஏடிஎம் வசதி உட்பட பல புதிய அம்சங்களுடன் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று திறந்து வைத்தார். இதேபோல் குஜராத்தின் நரோடாவில் மண்டல அலுவலகம், ஹரியானாவின் குருகிராமில் ஊழியர் குடியிருப்பு ஆகியவற்றையும் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 3.0 விரைவில் அறிமுகம் செய்யப்படும். இது வங்கி அமைப்புக்கு நிகராக இருக்கும். வங்கியில் பண பரிமாற்றம் நடைபெறுவதுபோல, பி.எப்.சந்தாதாரர்கள் தங்களின் யுஏஎன் கணக்கு மூலம் ஏடிஎம்-ல் இருந்து பணத்தை எடுக்கலாம். இதற்காக பி.எப் அலுவலகங்களுக்கோ, வேலைபார்க்கும் நிறுவனத்திடமோ தொழிலாளர்கள் செல்லத் தேவையில்லை. பி.எப் கணக்கில் உள்ளது தொழிலாளர்களின் பணம். அதை அவர்கள் விரும்பும்போது எடுத்துக் கொள்ளலாம். இதற்கான சீர்த்திருத்தங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. பண பரிமாற்றம், தொழிலாளர்களின் பெயர்களில் திருத்தங்கள், வங்கியிலிருந்து ஓய்வுத் தொகை பெறுவது போன்ற பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது சந்தாதார்களிடம் இருந்து வரும் புகார்கள் குறைந்துள்ளன. சேவைகள் அதிகரித்து வருகிறது. தொழிலாளர்களுக்கு ஏற்ற வகையில் பி.எப். அமைப்பு மற்றும் செயல்பாடுகள் மாறியுள்ளன. இவ்வாறு அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT