Published : 07 Mar 2025 06:18 PM
Last Updated : 07 Mar 2025 06:18 PM
ஹைதராபாத்: தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் EPFO 3.0-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இதன்மூலம் ஊழியர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதியை இனி ஏடிஎம் மூலமாக எடுத்துக்கொள்ள முடியும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு அமைப்பின் தெலங்கானா மண்டல அலுவலகம் மற்றும் ஹைதராபாத் அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்து பேசிய மன்சுக் மாண்டவியா, "இனி வரும் நாட்களில் EPFO 3.0 அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒரு வங்கியைப் போல மாறும். வங்கிகளில் மேற்கொள்வது போல அனைத்து பரிவர்த்தனைகளையும் நீங்கள் மேற்கொள்ள முடியும். உங்கள் (EPFO சந்தாதாரர்) யுஏஎன் (Universal Account Number) மூலம் பரிவர்த்தனை செய்யலாம்” என்று தெரிவித்தார்.
EPFO 3.0 என்றால் என்ன?: EPFO 3.0 என்பது தொழிலாளர் வைப்புநிதி அமைப்பின் நவீனப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இது, பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவும், அதிகாரத் தடைகளை நீக்குவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய மாற்றத்தின் மூலம் EPFO உறுப்பினர் தமது வைப்பு நிதியை எடுப்பதற்கு இனி அரசு அலுவலகங்களுக்கோ அல்லது வருங்கால வைப்பு நிதி அலுவலங்களுக்கோ செல்ல வேண்டியது இல்லை. அதற்கு பதிலாக, உறுப்பினர்கள் வைப்பு நிதியை வங்கிகளில் எடுப்பது போல தங்களின் யுஏஎன் எண்ணைப் பயன்படுத்தி ஏடிஎம்களில் எடுக்கலாம்.
உறுப்பினர்களுக்கு எவ்வாறு உதவிடும்? - EPFO 3.0-வின் முக்கியான நோக்கமே உறுப்பினர்கள் அவர்களின் நிதியை விரைந்து எடுக்கவும், அதற்கான நடைமுறைகளை எளிமையாக்குவதும்தான். தற்போது வைப்பு நிதியில் இருந்து உறுப்பினர் தனது பணத்தை எடுக்க பலகட்ட விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, நீண்ட நடைமுறைச் செயல்பாடுகளை மேற்கெள்ள வேண்டி உள்ளது. ஆனால், வரவிருக்கும் இந்த புதிய மாற்றத்தின் மூலம் இந்த நடைமுறைகள் அனைத்தும் நீக்கப்பட்டு, பண பரிமாற்றம், ஓய்வூதியத்தை திரும்பப் பெறுதல், பணம் எடுத்தல் போன்றவை மிகவும் எளிமையாக்கப்படும்.
எப்போது அறிமுகம்? EPFO 3.0 செயலியை அரசு வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் உறுப்பினர் தனது நிதி இருப்பு, பரிமாற்ற செயல்பாடுகளை கண்காணித்தல், அதிக சிரமம் இன்றி பணம் எடுத்தல் போன்றவற்றைச் செய்ய முடியும். இந்த மேம்பாடுகளின் மூலம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கையாளுவதற்கு மிகவும் எளிமையானதாக மாறும். தேவையற்ற தாமதங்களின்றி உறுப்பினர்கள் தங்களின் நிதியை முழுமமையாக கட்டுப்படுத்துவதை உறுதி செய்யும். EPFO 3.0 இந்தியாவின் தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பை அதிக டிஜிட்டல் மற்றும் பயனரை மையப்படுத்தும் செயல்பாடு நோக்கிய முன்னேற்றத்தின் குறிப்பிடத்தகுந்த மைல்கல்லாகும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT